தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் - உதயநிதி ஸ்டாலின்


தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும் - உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 17 March 2021 2:25 AM IST (Updated: 17 March 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரும், மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தியை ஆதரித்து நேற்று வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேனில் இருந்தபடி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

‘நீட்’ தேர்வால் கடந்த 3 ஆண்டுகளில் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்படி இறந்தார்? என்பது இதுவரை தெரியவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

மேல்விஷாரத்தில், மேம்பாலங்களை கொண்டு வந்தவர் இத் தொகுதியில் போட்டியிடும் காந்தி. தமிழகத்திலேயே முதன் முதலில் கான்கிரீட் சாலைகளை தொகுதிக்கு கொண்டு வந்தவர் காந்தி.

இப்போது ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புதிய அரசு மருத்துவக்கல்லூரி, ராணிப்பேட்டையில் வேளாண்மை கல்லூரி ஆகியவைஅமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இப்படி எண்ணற்ற சாதனைகளை செய்துள்ள வேட்பாளர் காந்தியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story