தாராபுரம் தொகுதி வளர்ச்சிக்கு முழுவதும் பாடுபடுவதே எனது முழு நோக்கம் - பாஜக தலைவர் எல்.முருகன்


தாராபுரம் தொகுதி வளர்ச்சிக்கு முழுவதும் பாடுபடுவதே எனது முழு நோக்கம் - பாஜக தலைவர் எல்.முருகன்
x
தினத்தந்தி 16 March 2021 10:22 PM GMT (Updated: 16 March 2021 10:22 PM GMT)

தாராபுரம் தொகுதி வளர்ச்சிக்கு முழுவதும் பாடுபடுவதே எனது முழு நோக்கமாக இருக்கும் என்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் எல்.முருகன் கூறினார்.

தாராபுரம், 

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சாா்பில் பா.ஜனதா வேட்பாளராக தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். தோ்தல் பிரசாரத்திற்கு தாராபுரம் வந்த அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவா் கூறியதாவது:-

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும் போது மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் சுலபமாக நிறைவேற்ற முடிகிறது. மத்திய பட்ஜெட்டில் ரூ. 5 லட்சம் கோடி தமிழகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

நான் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. வாக தோ்ந்தெடுக்கப்பட்டால் மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன். தாராபுரம் தொகுதிக்கு மருத்துவக்கல்லூரி கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும். அதுபோன்று மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன்.

மேலும் ஈரோடு-பழனி ரெயில் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசிடம் பேசி தாராபுரம் வழியாக ரெயில் பாதை அமைத்து தருவேன். அதோடு தாராபுரம் பகுதியில் விளையும் நெல் மற்றும் தானிய விதைகளை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தி விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும். தாராபுரம் தொகுதி வளர்ச்சிக்கு முழுவதும் பாடுபடுவதே எனது முழு நோக்கமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story