நேருக்கு நேர் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் - கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்து


நேருக்கு நேர் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் - கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்து
x
தினத்தந்தி 18 March 2021 1:32 PM GMT (Updated: 2021-03-18T19:02:38+05:30)

நேருக்கு நேர் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் ஆகியோர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

கன்னியாகுமரி, 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. 2019-ம் ஆண்டு தேர்தலைப் போலவே இம்முறையும் பாஜக - காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் மறைந்த எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தும் போட்டியிடுகிறார்கள். 

இந்நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எதிரெதிர் துருவங்களான பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

முன்னதாக கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் இருவரும் திடீரென சந்தித்துக் கொண்டனர். அரசியல் நாகரிகம் போற்றும் வகையில், விஜய் வசந்த் நேரடியாக அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அருகில் சென்று கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த நிகழ்வை நேரில் பார்த்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக விஜய் வசந்த் தனது டுவிட்டரில், “இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டோம். அவரைப் போன்ற மூத்த அரசியல்வாதியைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. களத்தில் போராட்டம் இருப்பினும் தனிநபர் மரியாதையை என்றும் பேணிக் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story