தொகுதி கண்ணோட்டம்: கும்பகோணம்
தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு 10 தொகுதிகள் இருந்தன. இதில் 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவோணம், வலங்கைமான் ஆகிய 2 தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக வேறு தொகுதிகள் எதுவும் சேர்க்கப் படவில்லை.
காவிரி ஆற்றுக்கும், அரசலாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கும்பகோணம் சட்டசபை தொகுதி நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு நெல், கரும்பு ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. கோவில்கள் நிறைந்த பகுதியான கும்பகோணம் கோவில் நகரம், டிகிரி காபி மற்றும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் திருவிழா என பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது.
சட்டசபை தொகுதிகளின் வரிசையில் 171-வது இடத்தை பெற்றுள்ள இந்த தொகுதியில், கும்பகோணம் ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளும், திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளும், சோழபுரம், தாராசுரம், திருநாகேஸ்வரம் பேரூராட்சி பகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் திருநாகேஸ்வரம் பேரூராட்சி, தொகுதி சீரமைப்புக்கு முன்பு திருவிடைமருதூர் தொகுதியில் இருந்தது. பாபநாசம் தொகுதியில் சோழபுரம் இருந்தது. இந்த பேரூராட்சிகள் தொகுதி சீரமைப்புக்கு பின்னர் கும்பகோணம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1960-ம் ஆண்டு கும்பகோணத்தில் அரசு மகளிர் கல்லூரி கொண்டு வரப்பட்டது. இந்த தொகுதி 1952-ம் ஆண்டு உருவானது. கும்பகோணத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளதால் அதிகளவில் விவசாய கூலி தொழிலாளர்கள் உள்ளனர். அதேபோல் பாத்திரம் உற்பத்தி, குத்துவிளக்கு உற்பத்தி, பட்டுபுடவை நெய்தல் போன்ற தொழில்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.
இந்த தொழில்களை செய்யும் தொழிலாளர்களுக்கு அன்றாடம் வேலைக்கு சென்றால் மட்டுமே கூலி கிடைக்கும். மாதத்தில் 10 நாட்கள் வேலையில்லாததால் கிடைத்த தொழிலை செய்து வருவார்கள். அதிலும் சிலர் வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்து வருவார்கள். மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரண உதவி தொகை வழங்குவது போல, இவர்களுக்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என இந்த பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதற்காக கும்பகோணத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. எனவே கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கும்பகோணம் நகராட்சி பகுதியில் 45 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கும்பகோணம் நகரில் கழிவுநீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. மழைக்காலங்களில் இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், சாலைகள் ஆங்காங்கே தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் உள்ளது. எனவே நகரம் முழுவதும் பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும். மேலும் தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது கும்பகோணம் நகர மக்களின் கோரிக்கையாகும்.
கும்பகோணத்தில் தயாராகும் கைத்தறி நெசவு பட்டுச்சேலைக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. தாராசுரம், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம் பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். நெசவுத்தொழிலுக்கான மூலப்பொருட்கள் இவர்களது தீராத பிரச்சினையாக உள்ளது. இதனால் போதிய வருமானம் இன்றி மாற்றுத்தொழிலுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே இதற்கு தீர்வு காண மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். விவசாயிகளுக்கு வழங்குவதுபோல் நெசவாளர்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குகோவில் நகரமான கும்பகோணம் தொகுதியில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் வசித்து வருகிறார்கள்.இந்த தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 15 சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. 1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பின்னர் 1977-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ராதா வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.பின்னர் 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1991-ம் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராம.ராமநாதன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோ.சி.மணி 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றார். இவர் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இதையடுத்து 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாக்கோட்டை அன்பழகன் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது கும்பகோணம் சட்டசபை தொகுதி 16-வது தேர்தலை சந்திக்க உள்ளது.
பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 2,72,506
ஆண்கள் 1,33,058
பெண்கள் 1,39,433
மூன்றாவது பாலினம் 15
Related Tags :
Next Story