தொகுதி கண்ணோட்டம்: அரக்கோணம்


தொகுதி கண்ணோட்டம்: அரக்கோணம்
x
தினத்தந்தி 18 March 2021 4:37 PM GMT (Updated: 18 March 2021 4:37 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் அரக்கோணம் (தனி) சட்டசபை தொகுதி முக்கியம் வாய்ந்த தொகுதியாகும்.

தொழிற்சாலைகள்
அரக்கோணம் சென்னைக்கு அருகாமையில் உள்ளது. அரக்கோணத்தை சுற்றிலும் காஞ்சீபுரம், திருத்தணி, சோளிங்கர், திருவலங்காடு போன்ற ஆன்மிக நகரங்கள் அமைந்துள்ளன. 8 பிளாட்பாரங்களை கொண்ட ரெயில் நிலையம் உள்ளது. மேலும் தனியார் டயர், டியூப் தொழிற்சாலை, தனியார் சிமெண்டு மற்றும் கல்நார் ஓடுகள் தயாரிக்கும் தொழிற் சாலை, 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ரெயில்வே பணிமனை, ரெயில் என்ஜின் களை பழுதுபார்க்கும் ரெயில்வே லோகோ பணிமனை, சித்தேரி பகுதியில் சிமெண்டு உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை போன்றவை இந்த தொகுதியில் அடங்கி உள்ளன.அரக்கோணத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான கடற்படை விமான தளம், ஐ.என்.எஸ். ராஜாளி, அதே விமானதளத்தில் இயங்கும் ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளி, தக்கோலம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம், தேசிய பேரிடர் மீட்பு படை மையம் ஆகியவை உள்ளன.

முதல் ரெயில் சேவை
தென்னிந்தியாவில் முதல் ரெயில் சேவை 1856-ம் ஆண்டு ஜூலை 1-ல் சென்னை ராயபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக ராணிப்பேட்டை வரை இயக்கப் பட்டது. அந்த வகையில் இந்திய ரெயில் வரலாற்றில் இடம் பெற்ற பெருமை அரக்கோணத்துக்கு உண்டு. ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கார்டர் மற்றும் நாட்டின் முக்கியமான பாலங்களுக்கு தேவைப்படும் கார்டர்கள், உதிரி பாகங்கள் அரக்கோணம் ரெயில்வே என்ஜினீயரிங் ஒர்க்‌ஷாப்பில் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. அரக்கோணம் தொகுதியில் ஏழைகள், நடுத்தர மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்திற்கும் சென்னைக்கு சென்று வருகின்றனர். வேளாண், நெசவு மற்றும் 
தொழில் துறையைப் பின்னணியாகக் கொண்ட தொகுதி அரக்கோணம் ஆகும்.

317 வாக்குச்சாவடி மையங்கள்
அரக்கோணம் சட்டசபை தொகுதியில் அரக்கோணம் ஒன்றியத்தை சேர்ந்த 26 ஊராட்சிகள், நகர பகுதியில் 36 வார்டுகள், தக்கோலம் பேரூராட்சியை சேர்ந்த 15 வார்டுகள், நெமிலி ஒன்றியத்தை சேர்ந்த 24 ஊராட்சி மன்றங்கள், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த 11 ஊராட்சிகள் இடம் பெறுகின்றன. அரக்கோணம் தொகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் முதலியார், வன்னியர், நாயுடு உள்ளிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் பரவலாக உள்ளனர்.தற்போது தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு காரணமாக ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி அரக்கோணம் தொகுதியில் 317 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 70 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7 முறை தி.மு.க. வெற்றி
அரக்கோணம் சட்டசபை தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 5 முறையும் காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.அரக்கோணம் தொகுதியில் 1952-ம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்டு பக்தவச்சலு நாயுடு வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேதாச்சலம் தோல்வி அடைந்தார். 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சடையப்ப முதலியார் வெற்றி பெற்றார். 1962 மற்றும் 1967-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜே.ராமசாமி முதலியார் வெற்றி பெற்றார். 1971-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.எஸ்.பலராமன் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து தி.மு.க. 3 முறை வெற்றி பெற்றது.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
1977-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் அரக்கோணம் தொகுதி தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.கே.ராஜூ வெற்றி பெற்றார், 1980-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் எம்.விஜயசாரதியும், காங்கிரஸ் சார்பில் ஜெயராஜியும் போட்டியிட்டனர். இதில் விஜயசாரதி வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1984-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் வி.கே.ராஜூவும் அ.தி.மு.க. சார்பில் எம்.விஜயசாரதியும் போட்டியிட்டனர். இதில் வி.கே.ராஜூ வெற்றி பெற்றார். 1989-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் வி.கே.ராஜூ, காங்கிரஸ் சார்பில் பி.ராஜ்குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் வி.கே.ராஜூ வெற்றி பெற்றார். 1991-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் லதா பிரியாகுமாரும், தி.மு.க. சார்பில் ஜி.மணியும் போட்டியிட்டதில் லதாபிரியாகுமார் வெற்றி பெற்றார்.1996-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.ஏழுமலை தோல்வி அடைந்தார். 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் பவானி கருணாகரனும், தி.மு.க. சார்பில் ஆர்.ரவிசங்கரும் போட்டியிட்டனர். இதில் பவானிகருணாகரன் வெற்றி பெற்றார்.2006-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் பூவை ஜெகன்மூர்த்தியும் அ.தி.மு.க. சார்பில் சு.ரவியும் போட்டியிட்டனர். இதில் பூவை ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் சு.ரவியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செல்லபாண்டியனும் போட்டியிட்டனர். இதில் சு.ரவி வெற்றி பெற்றார்.கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் சு.ரவியும் தி.மு.க. சார்பில் என்.ராஜ்குமாரும் போட்டியிட்டனர், இதில் சு.ரவி வெற்றி பெற்றார்.

கைத்தறி பூங்கா
அரக்கோணம் தொகுதியில் இளைஞர்கள் வேலைக்காக சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அதிகஅளவில் செல்கின்றனர். இப்பகுதியில் மேலும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலும், சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி பெறவும், அரக்கோணம் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது குருவராஜபேட்டை பகுதியில் கைத்தறி பூங்கா அமைத்து தர வேண்டும் என்பதாகும். எனவே, கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும். அரக்கோணத்தில் மூடப்பட்ட எக்கு தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க 
வேண்டும்.

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அல்லது வேலூர் செல்வதை தவிர்க்க அரக்கோணம் அரசு மருத்துவமனையில் துறை வாரியாக போதுமான டாக்டர்கள் நியமித்து தரம் உயர்த்த வேண்டும். அரக்கோணம் நகர எல்லை பகுதிகளாக இருக்கும் கும்பினிபேட்டை மற்றும் மங்கம்மாபேட்டை மேம்பாலங்களில் இரவு நேரத்தில் மக்கள் அச்சம் இன்றி செல்வதற்கு மின்விளக்குகள் அமைத்து தரவேண்டும். வாணியம்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம், முசல் நாயுடு கண்டிகை, கைனூர், வடமாம்பாக்கம் கண்டிகை மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்வதற்கு அனைத்து பஸ்களும் நாகாலம்மன் நகரில் நிறுத்தம் செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் பொது மக்களின் எதிர்பார்பாக உள்ளது.

அ.தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதல்
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சு.ரவி எம்.எல்.ஏ. வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அரக்கோணம் தொகுதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவுதமசன்னா போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிராமி போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சு.ரவி எம்.எல்.ஏ. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக உள்ளார். மேலும் தொடர்ந்து 2 முறை அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றியும், தோல்வியும்

அரக்கோணம் சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-

1952 - சுயேச்சை வெற்றி:-

பக்தவச்சலு நாயுடு (சுயே.) - 21,057

வேதாச்சலம் (காங்.) - 19,165

1957 - காங்கிரஸ் வெற்றி:-

எஸ்.சி.சடையப்ப முதலியார் (காங்.) - 29,669

தாமஸ் (சுயே.) - 10,527

1962 - தி.மு.க. வெற்றி:-

எஸ்.ஜே.ராமசாமி முதலியார்(தி.மு.க.) -26,586

பி.பக்தவச்சலு நாயுடு (காங்.) - 25,152

1967 - தி.மு.க. வெற்றி :-

எஸ்.ஜே.ராமசாமி முதலியார்(தி.மு.க.) -38,476

பி.பக்தவச்சலு நாயுடு (காங்.) - 30,854

1971- தி.மு.க. வெற்றி :-

என்.எஸ்.பலராமன் (தி.மு.க.) -42,256

எஸ்.கே.சுப்பிரமணியமுதலியார்(காங்.) -26,878

1977 - அ.தி.மு.க. வெற்றி :-

வி.கே.ராஜு (அ.தி.மு.க.) - 24,630

ஏ.கண்ணாயிரம் (தி.மு.க.) - 17,041

1980 - அ.தி.மு.க. வெற்றி:-

எம்.விஜயசாரதி (அ.தி.மு.க.) - 36,314

ஜி.ஜெயராஜி (காங்.) -35,393

1984 - தி.மு.க. வெற்றி:-

வி.கே.ராஜு (தி.மு.க.) -52,657

எம்.விஜயசாரதி (அ.தி.மு.க.) - 46,344

1989 - தி.மு.க. வெற்றி:-

வி.கே.ராஜு (தி.மு.க.) -42,511

பி.ராஜ்குமார் (காங்.) -20,538

1991 - காங்கிரஸ் வெற்றி :-

லதாபிரியாகுமார் (காங்.) - 61,314

ஜி.மணி (தி.மு.க.) - 30,332

1996 - தி.மு.க. வெற்றி :-

ஆர்.தமிழ்செல்வன் (தி.மு.க.) -70,550

ஆர்.ஏழுமலை (பா.ம.க.) - 23,730

2001 - அ.தி.மு.க. வெற்றி :-

பவானி கருணாகரன் (அ.தி.மு.க.) - 67,034

ஆர்.ரவிசங்கர் (தி.மு.க.) - 46,778

2006 - தி.மு.க. வெற்றி :-

பூவை ஜெகன்மூர்த்தி (தி.மு.க.) - 66,338

சு.ரவி (அ.தி.மு.க.) - 58,782

2011 - அ.தி.மு.க. வெற்றி :-

சு.ரவி (அ.தி.மு.க.) - 79,409

எஸ்.செல்லபாண்டியன் (வி.சி.க.)- 53,172

2016 - அ.தி.மு.க. வெற்றி :-

சு.ரவி (அ.தி.மு.க.) -68,176

என்.ராஜ்குமார் (தி.மு.க.)- 64,015


பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 2,26,511

ஆண்கள் 1,10,327

பெண்கள் 1,16,167

மூன்றாவது பாலினம் 17

Next Story