தொகுதி கண்ணோட்டம்: திருவையாறு


தொகுதி கண்ணோட்டம்: திருவையாறு
x
தினத்தந்தி 18 March 2021 11:04 PM IST (Updated: 18 March 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு 10 தொகுதிகள் இருந்தன. இதில் 2011-ம் ஆண்டு தேர்தலில் திருவோணம், வலங்கைமான் ஆகிய 2 தொகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக வேறு தொகுதிகள் எதுவும் சேர்க்கப்பட வில்லை.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில் 
திருவையாறு சட்டசபை தொகுதி 1957-ல் ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பரப்பளவு கொண்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தஞ்சை தொகுதியில் இருந்த 29 ஊராட்சிகள், திருவையாறு தொகுதியில் கூடுதலாக சேர்க்கப்பட்டன. திருவையாறு தொகுதியில் திருவையாறு, பூதலூர், செங்கிப்பட்டி, நடுக்காவேரி, திருக்காட்டுப்பள்ளி ஆகிய ஊர்கள் உள்ளன.

தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் 1989-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. அப்போது நடிகர் சிவாஜி கணேசன், திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது சட்டசபை தொகுதிகளின் வரிசையில் திருவையாறு தொகுதி 173-வது இடத்தை பெற்றுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி மற்றும் அதில் இருந்து பிரியும் குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என ஐந்து ஆறுகள் ஓடுவதால் திருவையாறு என அழைக்கப்படுகிறது. இந்த தொகுதியில் முதன்மையான தொழில் விவசாயம். இங்கு நெல், வெற்றிலை கொடிக்கால், வாழை போன்றவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை, ஏழாம் நூற்றாண்டை ேசர்ந்த ஐயாறப்பர் திருக்கோவில், கர்நாடக இசை மேதையும், சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜரின் சமாதி, பூண்டி மாதா பேராலயம், அரசு இசைக் 
கல்லூரி போன்றவையும் இந்த தொகுதியில் அமைந்து உள்ளன.

கடந்த 2011-16 ஆம் ஆண்டுகளில் அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு தொழிற்பயிற்சி நிலையம், பூண்டி-திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலம், ஆறுகளில் படுக்கை அணைகள் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் பிறகு 2016-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. தி.மு.க. எதிர்கட்சியாக இருந்ததால், கடந்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதியில் குறிப்பிடும்படியாக பெரிய அளவுக்கு திட்டங்கள் வரவில்லை.கல்லணையில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வந்தாலும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி-கண்டியூர் சாலை விரிவாக்கப் பணி இன்னும் முடிவடையவில்லை. 

தஞ்சை-அரியலூர் இடையே புதிய ெரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் கிடக்கிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.2,639 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட கல்லணைக்கால்வாய் புனரமைப்பு திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. திருவையாறு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டாலும் அதுவும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.பூதலூர், செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளைமேட்டு கால்வாய், உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் மற்றும் அவற்றை சார்ந்த 81 ஏரிகள் மூலம் 7,000 எக்டேர் பாசன நிலங்கள் உள்ளன. இந்த கால்வாய்களையும், ஏரிகளையும் முழுமையாக தூர்வாரி, நீர்வரத்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

இந்த தொகுதியில் மழை காலங்களில் காவிரி, கல்லணைக்கால்வாய் கரையோரம் வெள்ளம் ஏற்படும் காலத்தில் அபாய நிலை உள்ளது. விவசாயம் சார்ந்த இந்த தொகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஆறுகளில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தாலும், இன்னும் கட்டப்பட வேண்டிய தடுப்பணைகள் ஏராளமாக நிலுவையில் இருக்கின்றன.

திருவையாறில் அரசு மருத்துவமனை இருந்தாலும், இன்னும் மேம்படுத்தப்படாத நிலையில் உள்ளது. பூதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் இன்னும் பழைய நிலையே தொடர்கிறது. திருவையாறு நகரில் பாதாள சாக்கடை இல்லாததால், பாசன வாய்க்கால்களில் கழிவு நீர் செல்கிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.

கள்ளர் சமூகத்தினர் பெரும்பான்மையாகக் கொண்ட இத்தொகுதியில் ஆதிதிராவிடர், வன்னியர், முத்தரையர், உடையார் உள்ளிட்ட சாதியினரும் கணிசமான அளவில் உள்ளனர். இந்த தொகுதி இதுவரை மொத்தம் 14 தேர்தல்களை சந்தித்துள்ளன. இந்த தொகுதியில் தொடக்க காலத்தில் காங்கிரஸ் 2 முறையும், அதன் பிறகு தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தற்போது 15-வது முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது, திருவையாறு தொகுதி.

திருவையாறு சட்டசபை தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின்போது 1 லட்சத்து 22 ஆயிரத்து 613 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 575 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர்கள் 5 பேர் என மொத்தம் 2 லட்சத்து 48 ஆயிரத்து 193 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 419 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 358 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர்கள் 19 பேர் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 796 பேர் உள்ளனர். புதிய வாக்காளர்களாக 19 ஆயிரத்து 603 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள்தான் திருவையாறு சட்டசபை தொகுதியில் வெற்றி வேட்பாளரை நிர்ணயம் செய்ய உள்ளனர்.

இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
திருவையாறு சட்டசபை தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-

1957 காங்கிரஸ் வெற்றி

சுவாமிநாதமேற்கொண்டார்(காங்.) 19,722

பட்சிராஜாமூவராயர்(சுயே.) 8,270

1962 காங்கிரஸ் வெற்றி

பழனி(காங்.) 33,332

வையாபுரிநாட்டார்(தி.மு.க.) 24,220

1967 தி.மு.க.வெற்றி

புலவர் முருகையன்(தி.மு.க.) 37,693

கா.பா.பழனி(காங்.) 34,165

1971 தி.மு.க. வெற்றி

இளங்கோவன்(தி.மு.க.) 37,139

கா.பா.பழனி(பழைய காங்.) 29,813

1977 தி.மு.க. வெற்றி

இளங்கோவன்(தி.மு.க.) 28,550

பி.சி.பழனியாண்டி(அ.தி.மு.க.) 23,197

1980 அ.தி.மு.க. வெற்றி

எம்.சுப்பிரமணியன்(அ.தி.மு.க.) 42,636

இளங்கோவன்(தி.மு.க.) 23,967

1984 அ.தி.மு.க. வெற்றி

துரை.கோவிந்தராஜன்(அ.தி.மு.க.) 46,974

தஞ்சை ராமமூர்த்தி(த.நா.காமராஜர் காங்.) 39,901

1989 தி.மு.க. வெற்றி

துரை.சந்திரசேகரன்(தி.மு.க.) 36,981

நடிகர் சிவாஜிகணேசன்(தமிழக

முன்னேற்ற முன்னணி) 26,338

1991 அ.தி.மு.க. வெற்றி

கலியபெருமாள்(அ.தி.மு.க.) 57,648

துரை.சந்திரசேகரன்(தி.மு.க.) 37,249

1996 தி.மு.க. வெற்றி

துரை.சந்திரசேகரன்(தி.மு.க.) 57,429

எம்.சுப்பிரமணியன்(அ.தி.மு.க.) 30,418

2001 அ.தி.மு.க. வெற்றி

அய்யாறுவாண்டையார்(அ.தி.மு.க.) 55,579

துரை.சந்திரசேகரன்(தி.மு.க) 39,890

2006 தி.மு.க. வெற்றி

துரைசந்திரசேகரன்(தி.மு.க.) 52,723

துரை.கோவிந்தராஜன்(அ.தி.மு.க.) 52,357

2011 அ.தி.மு.க. வெற்றி

ரெத்தினசாமி(அ.தி.மு.க.) 88,784

கல்லணை செல்லக்கண்ணு(தி.மு.க.) 75,822

2016 தி.மு.க. வெற்றி

துரை.சந்திரசேகரன் (தி.மு.க) 1,00,043

சுப்பிரமணியன் (அ.தி.மு.க) 85,700

பயோடேட்டா
மொத்த வாக்காளர்கள் 2,67,796

ஆண்கள் 1,30,419

பெண்கள் 1,37,358 

மூன்றாவது பாலினம் 19


Next Story