‘பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை அமைய அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ கும்மிடிப்பூண்டியில் அன்புமணி பிரசாரம்
பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை அமைய அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் எம்.பிரகாசுக்கு ஆதரவாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி
பா.ம.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய கேட்டுக்கொள்கிறேன். வேட்பாளர் பிரகாஷ் வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி நமக்கு முதல்-அமைச்சராக வந்துள்ளார். அவருடைய ஆட்சி தொடர வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி இது.
மு.க.ஸ்டாலினை யாராலும் அணுக முடியாது. அவருடைய கட்சி நிர்வாகிகள் கூட அவரை பார்க்க முடியாது. தி.மு.க.வை வழிநடத்த மு.க.ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லை. அவர் எப்படி தமிழகத்தை நிர்வகிப்பார். பிரசாந்த் கிஷோர் கைகாட்டும் ஆள் தான் தி.மு.க.வின் வேட்பாளர்.
தி.மு.க. வந்தால் அராஜகம் நடக்கும்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும், என் உறவினர் நிலத்தை தி.மு.க.வினர் மிரட்டி அபகரித்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அ.தி.மு.க. அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. இதை நான் இலவசமாக பார்க்கவில்லை. இது மக்களின் சுமையை குறைக்கும் அத்தியாவசிய திட்டம். தி.மு.க.வின் பொய்களை மக்கள் நம்ப வேண்டாம்.
கடந்த காலங்களில் 3 அரசு பள்ளி மாணவர்கள் தான் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள். இந்த ஆண்டு அ.தி.மு.க. அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் 500 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு
பின்தங்கிய நிலையில் உள்ள அனைத்து சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வருவோம். வன்னிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தி.மு.க. ரத்துசெய்ய நினைக்கிறது. நாம் அதை நடக்க விடக்கூடாது.
நேற்று கரூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. மணல் திருட்டை ஆதரிக்கும் வகையில் பேசியிருக்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை அமைய அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story