கல்வி, மருத்துவம், குடிநீரை இலவசமாக வழங்குவோம்: மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்
மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று தூத்துக்குடியில் சீமான் பிரசாரம் செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேல்ராஜை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பாலைவனமாகும் நிலம்
தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் நமது நிலத்தின் வளத்தை கொள்ளையடித்து விட்டன. தமிழகத்தில் 32 ஆறுகள் மரணித்து விட்டன. மீத்தேன் எடுப்பதாக நிலத்தின் வளத்தை கெடுத்து விட்டார்கள். தற்போது எம்.சாண்ட் மணல் தயாரிக்கிறேன் என்று மலையை நொறுக்குகிறார்கள். இதனால் நம் நிலம் பாலைவனமாகுவது உறுதி.
காவிரி படுகையில் மீத்தேன், ஈத்தேன் இருப்பது போன்று கங்கை படுகையிலும் உள்ளது. ஆனால், அதனை எடுக்க மாட்டார்கள். தமிழகத்தை நாசம் செய்வதே அவர்களின் வேலையாக உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்து திறந்து வைத்தவர்கள், பின்னர் அதனை எதிர்க்கிறோம் என்கிறார்கள். தாமிர தட்டுப்பாட்டை பற்றி பேசுகிறவர்கள், தண்ணீர் தட்டுப்பாட்டை பற்றி பேசுவது இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மனு கொடுக்க சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டது கொடுமை.
நாங்கள் காலம் வரும் என்று காத்திருப்பவர்கள் அல்ல. எங்களுக்கான காலத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறோம். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அ.தி.மு.க.வுக்கு பதிலாக தி.மு.க., தி.மு.க.வுக்கு பதிலாக அ.தி.மு.க. என்பது பெரும் ஏமாற்று. 2 பேருக்கும் கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது. ஒரு கொடியில் அண்ணா இருக்கிறார். மற்றொரு கொடியில் அண்ணா இல்லை. இதுதான் வித்தியாசம்.
டாஸ்மாக்கில்தான் இரு கட்சிகளும் பாஸ்மார்க் வாங்குகிறார்கள். மாறி, மாறி இவர்களுக்கு ஓட்டு போட்டு நாட்டை வீணாக்கியதை தவிர, 50 ஆண்டுகளில் என்ன செய்து உள்ளீர்கள்.
மாற்றத்தை ஏற்படுத்த...
தேர்தல் வருகிறது, ஆனால் மாறுதல் வருகிறதா?. அந்த மாறுதலை உருவாக்குவதற்கு தான் நாங்கள் இந்த அரசியலை முன்னெடுத்து வருகிறோம். நாங்கள் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்குவோம்.
எல்லாவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் எங்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள். கைகட்டி நிற்கும் விவசாயியின் கைகளை உயர்த்த ஒரு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story