மக்களை நம்பியே அதிமுக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
மக்களவை நம்பியே அதிமுக உள்ளது. மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும் என தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரசாரத்தில் முதலமைச்சர் பேசியதாவது:-
மக்கள் வைத்த கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளோம். கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். நெசவாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்
10 ஆயிரம் ஏழை எளிய நெசவாளர்களுக்கு பசுமை வீடு கட்டித்தரப்படும். கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி அதிமுக. அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கூட்டணி. முக ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பச்சைப்பொய். குறுக்குவழியில் சென்று முதலமைச்சரானவர் கருணநிதி. ஆனால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் முதலமைச்சரானேன். முக ஸ்டாலின் அவதூறு கருத்துக்களை பேசிவருகிறார்.
தமிழகத்தில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு பல தேசிய விருதுகளை பெற்று வருகிறது. சரிவடைந்த தொழிலை உயர்த்திய அரசு அதிமுக. ஏப்ரல் 1 முதல் விவசாய பம்புசெட்களுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள முதல் மாநிலம் தமிழகம். மக்களை நம்பியே அதிமுக உள்ளது. மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும்.
என்றார்.
Related Tags :
Next Story