‘விவசாயி ஆட்சி வேண்டுமா? அரசியல் வியாபாரி ஆட்சி வேண்டுமா?’ சென்னையில் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரசாரம்


‘விவசாயி ஆட்சி வேண்டுமா? அரசியல் வியாபாரி ஆட்சி வேண்டுமா?’ சென்னையில் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரசாரம்
x
தினத்தந்தி 22 March 2021 4:15 AM IST (Updated: 22 March 2021 4:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் விவசாயி ஆட்சி வேண்டுமா? அரசியல் வியாபாரியின் ஆட்சி வேண்டுமா? என்று மக்கள் மத்தியில் அவர் கேள்வி எழுப்பினார்.

சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.வி.ஏ.கசாலியை ஆதரித்து, சேப்பாக்கம் எல்லீஸ் சாலை சந்திப்பில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று காலை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அமைப்புச் செயலாளர் மு.ஜெயராமன், மாவட்ட செயலாளர் வே.வடிவேல் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.

திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

விவசாயி-வியாபாரி

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் ஒரு விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். விவசாயியான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றால் மக்களுக்கு நல்லது.

வியாபாரியான மு.க.ஸ்டாலினிடம் ஆட்சி சென்றால் தமிழகத்தையே விற்றுவிடுவார். விவசாயி ஆட்சி வேண்டுமா? அரசியல் வியாபாரி ஆட்சி வேண்டுமா?

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் நிற்கிறார். தனது தாத்தா கருணாநிதி போட்டியிட்டார் என்பதற்காகவே இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து இருப்பதாக சொல்கிறார். மற்றபடி இந்த தொகுதியை பற்றியோ, இங்குள்ள சூழல் குறித்தோ அவருக்கு தெரியுமா? நாம் இன்னும் அமைதியாக இருந்தால் எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலினின் மகனும் இங்கு ஓட்டு கேட்டு வரக்கூடும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டாமா?

மக்களாட்சியா? மன்னராட்சியா?

அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி மக்களாட்சி. தி.மு.க. செயல்படுத்துவது மன்னராட்சி. எந்த ஆட்சி வேண்டும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். குடும்ப அரசியலால் தி.மு.க.வில் முன்னணி நிர்வாகிகளே விரக்தியில் இருக்கிறார்கள். உழைப்பவர்களுக்கு அங்கே மரியாதை கிடையாது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எவரும் எளிமையாக அணுகலாம். மனம்விட்டுப் பேசலாம். ஸ்டாலினிடம் அது முடியுமா? தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததா? எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என அராஜகமே அரங்கேறியது. அதையெல்லாம் மறக்கமுடியுமா?

எனவே நல்லாட்சி அமைய அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். இந்த கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகம் அமைதியாக, நிம்மதியாக இருக்கும். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க. வேட்பாளர் கசாலிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மதுரவாயல்

இதேபோல மதுரவாயல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் பென்ஜமினை ஆதரித்தும் போரூர் ஆலப்பாக்கத்தில் அன்புமணி ராமதாஸ் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘எங்கள் யோசனைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்’ என்று கூறினார்.

Next Story