பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது - ஓ.பன்னீர் செல்வம் பேச்சு


பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது - ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 22 March 2021 10:43 AM IST (Updated: 22 March 2021 10:43 AM IST)
t-max-icont-min-icon

பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்துவருகிறது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தேனி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். அவர் போடி தொகுதிக்கு உள்பட்ட பல பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரசாரத்தின் போது பேசிய அவர், தாலிக்கு தங்கம் திட்டத்தில் 4 கிராமில் இருந்து 8 கிராம் ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. மக்கள் நலனுக்காக ஜெயலலிதா பல திட்டங்களை பார்த்து பார்த்து செய்தார். திமுக கூறிய 2 ஏக்கர் நிலம் என்ன ஆனது?. பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது’ என்றார்.

போடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து திமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். அதேபோல், அமமுக சார்பில் முத்துச்சாமி போட்டியிடுகிறார். இதனால், இத்தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

Next Story