அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பது கட்டாயமாக்கப்படும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தேர்தல் வாக்குறுதி
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிப்பது கட்டாயமாக்கப்படும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஆதரவு அளித்துள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
சென்னை,
அரசு பணியை துறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதற்காக புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முன்னேற்பாடுகளை செய்து வந்தார்.
இந்தநிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியானதால் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிடுவது சாத்தியமில்லை என்று கூறி தனது பெயரில் செயல்பட்டு வரும் சகாயம் அரசியல் பேரவை சார்பில் தேர்தலில் களம் காண்பது என்று முடிவு செய்தார்.
இதன்பின்பு, தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் வளமான தமிழகம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சகாயம் அரசியல் பேரவை தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தார்.
தேர்தல் அறிக்கை
இந்த கூட்டணி தமிழகம் முழுவதும் 36 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடைபெற்றது.
மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ராஜசேகர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மாநில தலைவர் பிரதீப் விசுவநாதன், ராயபுரம் தொகுதி வேட்பாளர் ஜேம்ஸ் மார்ட்டின், கொளத்தூர் தொகுதி வேட்பாளர் சுரேஷ் ஆகியோர் தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்டார்.
அரசுடமையாக்கப்படும்
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கட்டணத்தை அரசு தனியாக உருவாக்க இருக்கும் வங்கி கணக்கில் மட்டுமே செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி அரசுடமையாக்கப்படும்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயமாக்கப்படும்.
லஞ்சம் வாங்கினால் பணி நீக்கம்
தமிழகத்தில் தயாராகும் அனைத்து பாரம்பரிய பொருட்களையும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.
தலைவலி முதல் புற்றுநோய் வரையிலான அனைத்து மருந்துகள், முக கவசம் முதல் ரோபா வரை அனைத்து உபகரணங்களையும் அரசே தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான செலவை அரசே நிர்ணயிக்கும். லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
மேற்கண்டவை உள்பட 40 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
Related Tags :
Next Story