கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 12 பேர் போட்டி பா.ஜனதா-காங்கிரஸ் நேரடி மோதல்


கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 12 பேர் போட்டி பா.ஜனதா-காங்கிரஸ் நேரடி மோதல்
x
தினத்தந்தி 22 March 2021 11:11 PM GMT (Updated: 22 March 2021 11:11 PM GMT)

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 12 பேர் போட்டியிடுகிறார்கள். அங்கு காங்கிரஸ்-பா.ஜனதா நேரடியாக மோதுகிறது.

நாகர்கோவில், 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் சட்டசபை தேர்தலோடு, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வசந்த்குமார் மகன் விஜய் வசந்த்தை காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது.

ஏற்கனவே இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் பா.ஜ.க. வேட்பாளராக உள்ளார்.

வேட்பாளர் இறுதி பட்டியல்

இந்த தொகுதிக்கு கடந்த 12-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 19-ந்தேதி முடிவடைந்தது. அப்போது நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேட்புமனு பரிசீலனையின் போது 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் கடைசி நாளான நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் ஒரு மனு வாபஸ் பெறப்பட்டது.

12 பேர் போட்டி

அதன்படி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் 12 பேர் போட்டியிடுகிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.), விஜய் வசந்த் என்ற விஜயகுமார் (காங்கிரஸ்), அனிட்டர் ஆல்வின் (நாம் தமிழர் கட்சி), சுபா சார்லஸ் (மக்கள் நீதி மய்யம்) மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் காங்கிரஸ்-பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் களத்தில் இருப்பதால் தேசிய கட்சிகளுக்கு அந்த இரு கட்சிகளும் கடும் சவாலை கொடுக்கும் என தெரிகிறது. 

Next Story