தொகுதி கண்ணோட்டம்: தியாகராயநகர்


தொகுதி கண்ணோட்டம்: தியாகராயநகர்
x
தினத்தந்தி 23 March 2021 1:33 PM GMT (Updated: 23 March 2021 1:33 PM GMT)

சென்னை மாநகரில் வணிக கேந்திரமாக விளங்குவது தியாகராயநகர் பகுதி. இந்த பெயர் தாங்கிய சட்டமன்ற தொகுதி 1957-ம் ஆண்டு உதயமானது.

சென்னை மாநகரில் வணிக கேந்திரமாக விளங்குவது தியாகராயநகர் பகுதி. இந்த பெயர் தாங்கிய சட்டமன்ற தொகுதி 1957-ம் ஆண்டு உதயமானது. வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வேலைதேடி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டி வருவது இந்த பகுதிதான். தியாகராயநகர் தொகுதியின் எல்லைகளாக அண்ணாநகர், ஆயிரம்விளக்கு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. சென்னை மாநகராட்சி வார்டுகளை எடுத்துக்கொண்டால், 117, 120 முதல் 127 வரை மற்றும் 137 ஆகியவை இடம்பெற்றுள்ளன.


வடபழனி முருகன் கோவில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவில், பிரமாண்ட ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறு கடைகள் இந்த தொகுதியின் அடையாளங்கள். உயர்தட்டு மக்கள் முதல் கீழ்த்தட்டு மக்கள் வரை அனைவருக்குமான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைப்பது தனிச்சிறப்பு.

அதுமட்டுமல்லாது, பா.ஜ.க., பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி என அதிக அரசியல் கட்சி அலுவலகங்கள் இந்த தொகுதியில்தான் இருக்கின்றன.

இதுவரை, தியாகராயநகர் தொகுதியில் 14 முறை நடைபெற்ற தேர்தலில், தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், ஸ்தாபன காங்கிரஸ், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

1957-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.விநாயகம் வெற்றி பெற்றார். 1962-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் காஞ்சி மணிமொழியாரும், 1967-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ம.பொ.சிவஞானமும், 1971-ம் ஆண்டு தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் கே.எம்.சுப்பிரமணியமும், 1977-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.இ.சந்திரன் ஜெயபாலும் வெற்றி பெற்றனர்.

1980-ம் ஆண்டு தேர்தலில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் கே.சவுரிராஜன் வெற்றி வாகை சூடினார். தொடர்ந்து, 1984-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கிய அவர் மீண்டும் வெற்றி பெற்றார். 1989-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் சா.கணேசனும், 1991-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாரும், 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் டாக்டர் ஏ.செல்லக்குமாரும், 2001-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஜெ.அன்பழகனும், 2006 மற்றும் 2011-ம் ஆண்டு தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கலைராஜனும், 2016-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சத்தியநாராயணன் என்ற சத்யாவும் வெற்றி பெற்றனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்குகள் 2,40,352

பதிவான வாக்குகள் 1,41,413

சத்தியநாராயணன் (அ.தி.மு.க.) 53,054

டாக்டர் எஸ்.என்.கனிமொழி (தி.மு.க.) 49,765

தியாகராயநகர் தொகுதியில் முதலியார், நாயுடு, நாடார், வன்னியர் சமுதாய மக்கள் கலந்து காணப்படுகிறார்கள். மேற்கு மாம்பலத்தில் பிராமணர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் சினிமா தொழிலாளர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

தொகுதியில் உள்ள பிரச்சினை என்று எடுத்துக்கொண்டால், தியாகராயநகர் பகுதியில் புதிய பாலங்கள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து நெரிசலுக்கு இன்னும் தீர்வுகாணப்படவில்லை. பொதுஇடங்களில் போதிய அளவு கழிப்பறை வசதி இல்லாததும் குறையாக பார்க்கப்படுகிறது. மேலும், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய அளவு இடவசதி செய்யப்படவில்லை. மழைக்காலங்களில் சுரங்கப்பாதைகள் குளம்போல் காட்சியளிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தியாகராயநகர் தொகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 352 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் தற்போது 4 ஆயிரத்து 334 அதிகரித்துள்ளது.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் என்ற சத்யாவே போட்டியிடுகிறார். தி.மு.க. தரப்பில் ஜெ.கருணாநிதி வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், மறைந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் சகோதரர் ஆவார். மக்கள் நீதிமய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுகிறார். கடைசியாக நடைபெற்ற 3 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே “ஹாட்ரிக்” வெற்றியை பதிவு ருசித்துள்ளது.. எனவே, இந்த முறையும் அந்த வெற்றி தொடருவதற்கான வழிவகைதான் தெரிகிறது.

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 2,44,686

ஆண்கள் -1,20,734

பெண்கள் -1,23,905

மூன்றாம் பாலினம் - 47

Next Story