துணி துவைத்து,தோசை சுட்டு , டீ போட்டு வாக்காளர்களை கவர புதுப்புது முறைகளைக் கையாளும் வேட்பாளர்கள்


துணி துவைத்து,தோசை சுட்டு , டீ போட்டு வாக்காளர்களை கவர புதுப்புது முறைகளைக் கையாளும் வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 23 March 2021 10:10 PM IST (Updated: 23 March 2021 10:10 PM IST)
t-max-icont-min-icon

துணி துவைத்து,தோசை சுட்டு , டீ போட்டு வாக்குகளைப் பெற புதுப்புது முறைகளை வேட்பாளர்கள் கையாண்டுவருகிறார்கள்.

சென்னை

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களும், வாக்கு சேகரிப்பில் புதிய யுக்திகளைக் கையாளுகின்றனர்.  டீ கடைகளில் டீ போடுவது, உணவகங்களில் புரோட்டா போடுவது, தோசை சுடுவது, துணி துவைப்பது, பெண்களுக்கு உதவி செய்ய அடுப்பு ஊதுவது, தண்ணீர் அடித்துக் கொடுப்பது, விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடுவது உள்ளிட்ட பல யுக்திகளைக் கையாண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர். 

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக தங்க. கதிரவன் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து, அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.தேர்தலில் வெற்றி பெற்றால் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என கைகளில் துணி துவைத்தபடி வாக்குறுதி அளித்து நேற்று (திங்கள்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார்.  அவர் துணி துவைக்கும் விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலானது.
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு தொகுதியை சேர்ந்த ஒரு வீட்டிற்கு சென்று டீ - போட்டு அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

குஷ்பு குலாம் அபாஸ் அலிகான் பகுதியில் தீவர பிரச்சாரத்தில் குஷ்பு ஈடுபட்டார். ஓட்டு கேட்டு வந்த குஷ்புவை பார்த்த காதல் தம்பதிகளான முஸ்தபா - சலீன் ரீட்டா அவரை தங்களது வீட்டிற்கு வந்து தேனீர் அருந்த அழைத்தனர். அவர்களுக்கு மதிப்பளித்த குஷ்பு முஸ்தபா வீட்டிற்கு சென்றது மட்டுமின்றி, சமையலறைக்குள் நுழைந்து டீ தயாரித்தார். பிரச்சாரத்திற்கு வந்த குஷ்பு தங்கள் வீட்டில் டீ போடுவதை ஆச்சர்யத்துடன் முஸ்தபா குடும்பத்தினர் பார்த்தனர்.பின்னர் அனைவருக்கும் சிரித்த முகத்துடன் டீ கொடுத்த குஷ்பு தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர ராஜா தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு ஓட்டலில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார்.

கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியுள்ள அதிமுக கூட்டணி வேட்பாளர், சிலம்பம் சுற்றி தனது திறமையை நிரூபித்த நிலையில், திமுக வேட்பாளரோ கொரோனா வரும் முன் காக்கும் விதமாக வீடு வீடாக மாஸ்க் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

அதிமுக கூட்டணியில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

அசூர் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்ரீதர்வாண்டையார் சிலம்பத்தை சுற்றி தனது திறமையை நிரூபித்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.அதே நேரத்தில் கும்பகோணம் தொகுதி திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன், முககவசம் கையுறை அணிந்தபடி தனது ஆதர்வாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அனைவரிடமும் துண்டுபிரசுரம் மட்டுமல்லாமல் ஆளுக்கு ஒரு முககவசத்தையும் வழங்கினார்.

கூட்டத்தில் முககவசம் அணியாமல் நின்றிருந்த சிறுவர் சிறுமிகளுக்கு சாகோட்டை அன்பழகன் மாஸ்க் அனிந்துவிட்டதோடு, தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..!

Next Story