தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் கேள்வி


தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 24 March 2021 5:16 AM IST (Updated: 24 March 2021 5:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ‘தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா?', என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். மேலும் ‘ஒரு விவசாயி மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும்', எனவும் அவர் பேசினார்.

சென்னை, 

ஆவடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் க.பாண்டியராஜன், அம்பத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.அலெக்சாண்டர் ஆகியோரை ஆதரித்து, ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை தேர்தல் பிரசாரம் செய்தார்.

தேர்தல் பிரசாரத்தின்போது திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் கொடுமைகள்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். இதில் ஒரு விவசாயி வெற்றி பெற வேண்டுமா? அல்லது ஒரு அரசியல் வியாபாரி வெற்றிபெற வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்யவேண்டும். தி.மு.க. ஆட்சியில் தமிழகம் என்னென்ன கொடுமைகளை சந்தித்தது என்பதை மறந்துவிட முடியுமா?

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என அநியாயங்கள், அக்கிரமங்கள் தாண்டவமாடியது. தி.மு.க. ஆட்சியில் பெண்கள் நிம்மதியாக நடமாட முடிந்ததா?. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி என்றுமே அ.தி.மு.க. அரசுதான். இதை மக்கள் மறுக்க முடியுமா? அ.தி.மு.க. அரசு ஆட்சியில்தான் பெண்கள் நிம்மதியாக இருக்க முடியும். எண்ணற்ற திட்டங்களையும் பெண்களின் நலனுக்காக அ.தி.மு.க. அரசு முன்னெடுத்து இருக்கிறது.

மக்களாட்சியா? மன்னராட்சியா?

தி.மு.க. என்பது ஒரு கம்பெனி. அங்கு உழைப்பவர்களுக்கு என்றுமே மரியாதை கிடையாது. தி.மு.க.வின் கொள்கையே குடும்ப அரசியல்தான். கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இதனைத்தொடர்ந்து இனி உதயநிதி ஸ்டாலினின் வாரிசுகள் தான் தி.மு.க.வில் பதவி சுகத்தை அனுபவிப்பார்கள். எப்படியாவது முதல்-அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்பதற்காக, பீகாரில் இருந்து வந்த பிரசாந்த் கிஷோரை பெரிதும் நம்பி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் நாங்கள் மக்களாகிய உங்களை மட்டுமே நம்பியிருக்கிறோம்.

அ.தி.மு.க. என்பது மக்களாட்சி. தி.மு.க. என்பது மன்னராட்சி. எனவே தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? என சிந்தித்து பார்த்து வாக்களியுங்கள்.

தி.மு.க.வினர் அராஜகம்

எடப்பாடி பழனிசாமி எனும் ஒரு விவசாயி மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும். அதுதான் நமது மாநிலத்திற்கு நல்லது. ஆட்சிக்கு வராதபோதே தி.மு.க.வினர் அராஜகங்களை நடத்தி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.

தமிழகம் சிறக்க அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ‘இரட்டை இலை' சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெற செய்யவேண்டும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story