234 தொகுதிகளில் எங்கிருந்தாலும் மனம் கோவையைத்தான் சுற்றி வருகிறது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்


234 தொகுதிகளில் எங்கிருந்தாலும் மனம் கோவையைத்தான் சுற்றி வருகிறது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
x
தினத்தந்தி 24 March 2021 2:24 PM IST (Updated: 24 March 2021 2:24 PM IST)
t-max-icont-min-icon

234 தொகுதிகளில் எங்கிருந்தாலும் மனம் கோவையைத்தான் சுற்றி வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கோவை,

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி, வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, டார்ச்லைட் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அதுபோன்று நடைபயிற்சி சென்றும், ஆட்டோ, பஸ்சில் பயணித்தும் தனக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-

தமிழகத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது. எனவே தமிழகத்தை சீரமைக்க நீங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

தஞ்சாவூரில் நான் பிரசாரம் மேற்கொண்டாலும் என்னுடைய மனம் கோவை தெற்கில் தான் இருக்கிறது. தமிழகத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு இருந்தாலும் திரும்ப, திரும்ப இந்த தொகுதிக்கு நான் வந்து கொண்டு தான் இருப்பேன். தமிழகத்தில் 234 தொகுதிகளில் எங்கிருந்தாலும் மனம் கோவையைத்தான் சுற்றி வருகிறது.

இலவசங்கள் கொடுக்க, கொடுக்க தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனின் தலையிலும் கடன் சுமை ஏறி கொண்டே போகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டியது உங்களது கடமை. அதற்கு இருக்கும் ஒரே கருவி மக்கள் நீதிமய்யம் மட்டும் தான். அதன் ஒரு சிறு கருவி நான். என்னை கருவியாக பயன்படுத்துங்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story