சட்டமன்றத்தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,561 பேர் கைது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


சட்டமன்றத்தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,561 பேர் கைது தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 March 2021 8:50 PM GMT (Updated: 24 March 2021 8:50 PM GMT)

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,561 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை, 

சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

8,561 பேர் கைது

‘சி-விஜில்’ செயலி மூலம் 2,313 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 1,607 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் கரூரில் இருந்து 487 புகார்கள் வந்துள்ளன. அடுத்ததாக, கோவை 365, திருப்பூர் 131, சென்னை 130, கன்னியாகுமரி 127 புகார்கள் வரப்பெற்றுள்ளன.

தேர்தல் பிரசாரத்துக்காக 8,769 வாகனங்களுக்கும், 821 நட்சத்திர பேச்சாளர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் பெற்ற 18 ஆயிரத்து 714 துப்பாக்கிகள் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 29 உரிமங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளன.

துணை ராணுவம் வருகை

235 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 28-ந்தேதி தமிழகத்திற்கு வருகின்றனர். இதுவரை 300 கம்பெனி வீரர்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. நாம் ஏற்கனவே 330 கம்பெனி துணை ராணுவம் கேட்டிருக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதலாக இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்கும்.

போலீசார் தவிர ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், முன்னாள் போலீசார், முன்னாள் துணை ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், வெளிமாநில போலீசார் உள்ளிட்டவர்களையும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தமிழக டி.ஜி.பி. கடிதம் எழுதியுள்ளார்.

வாகன சோதனையில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பிடிபட்டால், அது வருமான வரித்துறையினரால் விசாரிக்கப்படும். வருமான வரி துறைக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். முசிறி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜ் காரில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வந்த தகவல் குறித்து வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. விசாரணையின் முடிவு, தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும்.

போலீஸ் விசாரணை

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை ஈடுபடுத்தப்பட உள்ளனர். கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியின் பேச்சு பற்றி சி-விஜில் மூலம் எந்த புகாரும் வரவில்லை. வீடியோ வடிவில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி அவர்தான் பேசினாரா? அல்லது ‘‘மார்பிங்” தொழில்நுட்பம் மூலம் அப்படி தயாரிக்கப்பட்டதா? என்பதையெல்லாம் அவர்கள் விசாரிப்பார்கள். வேட்பாளரிடமும் சென்று, இதுபற்றிய வாக்குமூலம் பெறப்படும். அதன் பின்னர்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

அதில் தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டிருந்தால் அதை இந்திய தேர்தல் ஆணையம் தலையிடும். வேட்பாளர்கள் யார்? யார்? களத்தில் நிற்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டதால், தேர்தல் செலவின பார்வையாளர்கள் அனைத்து தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை தற்போது கண்காணித்து வருகிறார்கள்.

முககவசம் கட்டாயம்

வாக்களிக்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். வாக்குச்சாவடி மையங்களில் முககவசம் வழங்கப்படமாட்டாது. ஒருவேளை ஒரு சிலருக்கு முககவசம் இல்லை என்றால் அவர்களுக்கு கொடுப்பதற்காக சில முககவசங்கள் மட்டும் அங்கு வைக்கப்பட்டு இருக்கும். வாக்களிக்க வரும் அனைவருக்கும் இலவசமாக ஒரு கையுறை வழங்கப்படும்.

தமிழகத்தில் தற்போது கொரோனா 2-வது அலை பரவுதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து தமிழக சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. அரசியல் கட்சியினர், தமிழக அரசு அளித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். பின்பற்றாவிட்டால் அரசு உரிய நடவடிக்கையை எடுக்கும்.

எந்திரத்தில் முறைகேடு முடியாது

வாக்குப்பதிவு எந்திரத்தில் அலைவரிசை மூலம் எந்த வகையிலும் முறைகேடு செய்ய முடியாது. அப்படியே வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்றால், நிரூபிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் வாய்ப்பு கொடுத்தது. ஆனால் யாரும் வந்து நிரூபிக்கவில்லை. வாக்குப்பதிவு எந்திரம் மிகவும் பாதுகாப்பானது.

வாக்குப்பதிவு முடிந்ததும், ஏப்ரல் 6-ந்தேதியன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள ‘‘ஸ்டாங்க்” ரூமுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். வாக்குப்பதிவு எந்திரம் பாதுகாப்பாக வைத்துள்ள அறை ‘சீல்’ வைக்கப்பட்டு, வெளியே துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 2-வது மற்றும் 3-வது அடுக்கு பாதுகாப்பில் மாநில போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இதுதவிர, கண்காணிப்பு கேமரா மூலமாகவும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். அந்தப் பகுதிக்குள் யாரும் செல்வதாக இருந்தால் கையெழுத்து போடுவது உள்பட சில நடைமுறைகளை தாண்டியே செல்ல முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story