7 நாட்கள் நடைபெறுகிறது முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் தபால் ஓட்டு
சென்னையில் முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் இன்று முதல் 7 நாட்கள் தபால் ஓட்டு பெறும் பணி நடைபெறுகிறது. இதற்காக வாக்குப்பதிவு குழுவினர் வீடு, வீடாக சென்று பணி மேற்கொள்வார்கள்.
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையம் வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்துள்ளது.
அவர்கள் தபால் வாக்குகள் அளிக்க நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு குழு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் தலைமையில், மத்திய தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்தது.
அதன் பின்னர் கமிஷனர் பிரகாஷ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோயாளிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து ஓட்டுப்போட முடியாத சூழலில், அவர்களின் வீடுகளிலேயே இருந்தவாறு ஓட்டு போடும் முறை தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தபால் ஓட்டில் இருந்து சற்று மாறுபட்ட வகையில், சம்பந்தப்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே தேர்தல் அலுவர்கள் சென்று வாக்குப்பதிவு செய்து, அதனை வீடியோ பதிவு செய்து, பெறப்பட்ட வாக்குகளை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பதுதான் இந்த திட்டம்.
இன்று முதல் தபால் ஓட்டு
சென்னை மாநகராட்சியில் 80 வயதுக்கு மேற்பட்ட 6 ஆயிரத்து 992 பேரும், மாற்றுத்திறனாளிகள் 308 பேரும் என 7 ஆயிரத்து 300 பேர் இந்த திட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதற்கான படிவம் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் வழங்கப்பட்டது. அதில் 12 ஆயிரம் பேர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்திருந்த நிலையில், 4 ஆயிரத்து 700 பேரின் படிவத்தில் அடிப்படையான விவரங்கள் எதுவும் இல்லாததால், அவை நிராகரிக்கப்பட்டன.
இறுதியாக 7 ஆயிரத்து 300 பேரின் படிவங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரின் வீடுகளிலும் நாளை (இன்று) முதல் தபால் வாக்குகள் பெறும் பணிகள் தொடங்குகிறது. இந்த பணிகள் வருகிற 31-ந் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும்.
இதற்காக 70 வாக்குப்பதிவு குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வாக்குப்பதிவு அதிகாரிகள், நுண் பார்வையாளர், போலீஸ்காரர், வீடியோ பதிவு செய்பவர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பார்கள். ஒரு குழு தினசரி 15 வாக்குகளை அந்தந்த வீடுகளில் சென்று பதிவு செய்யும்.
குறுஞ்செய்தி
தபால் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்களின் குழு, சம்பந்தப்பட்ட தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளரின் முகவரிக்கு வருகை தரும் தேதி மற்றும் நேரம், அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். செல்போன் இல்லாத வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
தினமும் பெறப்படும் தபால் வாக்குகள் விவரம், இணைய வழியாக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், சென்னை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு குழுவுக்கு தேவையான வாக்குப்பதிவு பொருட்களை மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story