அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது உறுதி அளித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி வேட்பாளர் சின்னதுரை, கெங்கவல்லி தொகுதி வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தொகுதி வேட்பாளர் உதயசூரியன், ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மணிகண்ணன் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்திலும், கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினத்துக்கு கை சின்னத்திலும் வாக்குகள் கேட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஆத்தூர் தொகுதியில் பொதுமக்களிடையே அவர் பேசியதாவது:-
அதிக விஷம்
முதல்-அமைச்சராக இருக்கும் பழனிசாமி ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு, ஏன், நேற்றைக்கு கூட அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்ற கதையெல்லாம் சொன்னேன். ஊர்ந்து… ஊர்ந்து…சென்று முதல்-அமைச்சர் ஆனார் என்று சொன்னேன். இதை நான் இட்டுக்கட்டி சொல்லவில்லை. நீங்கள் சமூகவலைதளங்களில் பார்த்த செய்தியைத்தான் சொன்னேன். இதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. நான் பாம்பா? பல்லியா? என்று கேட்கிறார். பாம்பு, பல்லி விஷத்தை விட பழனிசாமிக்குதான் அதிக விஷம் இருக்கிறது.
தி.மு.க. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. ஆனால் ஏற்கனவே 5 முறை தலைவர் கருணாநிதி ஆட்சிப்பொறுப்பில் இருந்த நேரத்தில் என்னென்ன செய்திருக்கிறோம்? என்பதை சொல்கிறோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன செய்யப்போகிறோம்? என்பதையும் சொல்கிறோம்.
எத்தனை பேருக்கு வேலை?
அதுபோல ஜெயலலிதா இறந்ததற்கு பின்னர் 4 ஆண்டுகளாக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறீர்களே… நீங்கள் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? என்ற கேள்வியை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். உடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது. இந்த கேள்விக்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி ரூ.3 லட்சம் கோடி முதலீட்டை இந்த தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.
ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். மாநாடு நடந்தது உண்மைதான். அதேபோல வெளிநாட்டிற்கு முதல்-அமைச்சர் உள்பட சில மந்திரிகள் கோட்- சூட்டு போட்டுக்கொண்டு சுற்றுலா சென்று வந்தது உண்மைதான். மறுக்கவில்லை. 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.3 லட்சம் கோடி முதலீடு கொண்டுவந்தோம் என்று பழனிசாமி சொல்கிறாரே… அதன் மூலமாக தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தொழிற்சாலைகள் கொண்டுவந்தீர்கள்? எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்திருக்கிறீர்கள்? அதற்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள்.
முதல்-அமைச்சர் பதவிக்கு அழகா?
அது மட்டுமல்ல காவிரியை மீட்டேன்… காவிரியை மீட்டேன்… என்று ஒரு பொய்யை சொல்லத் தொடங்கி இருக்கிறார். அவர் மீட்கவில்லை. கலைஞர் போல அதிகாரம் பொருந்திய அமைப்பை பழனிசாமி பெற்றுக்கொடுத்தாரா? இல்லை. மத்திய அரசின் ஜல்சக்தி துறையில் ஒரு கிளை போல அதிகாரமில்லாத வாரியத்தை பா.ஜ.க.விற்கு பயந்து பெற்று, டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. இவ்வாறு அவர் பொய் பேசலாமா? முதல்-அமைச்சர் பதவிக்கு அழகா இது?.
காவிரி-வைகை குண்டாறு திட்டம்
அதேபோல காவிரி-வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக ஒரு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு சமீபத்தில் அடிக்கல் நாட்டு விழா நாடகம் நடந்தது. அந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமரை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அவ்வாறு பிரதமர் வருவதாக எங்களுக்கு செய்தி கிடைத்தது.
உடனே நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். “நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும் போது பல அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்ளப்போகிறீர்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் காவிரி-வைகை குண்டாறு இணைப்புத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக நாங்கள் செய்தி கேள்விப்பட்டோம். ஆனால் அது ஏற்கனவே தலைவர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட திட்டம். எனவே அந்த திட்டத்தை மீண்டும் தொடங்கி வைப்பதாக ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை நீங்கள் திறந்து வைத்தால் நீங்கள் கேலிக்கு விமர்சனத்துக்கு ஆளாகிவிடுவீர்கள்” என்று சொன்னேன்.
அது பிரதமருக்கு தெரிந்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். ஆனால் அதற்கு பிறகு அந்த நிகழ்ச்சியை அவர் இல்லாமலேயே நடத்தி இருக்கிறார்கள். இவ்வாறு சாதனையே செய்யாமல் நாங்கள் சாதனைகளைச் செய்தோம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்
அதேபோல இன்றைக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எத்தனையோ கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு போராடிக்கொண்டிருக்கும் அவர்களை, இந்த ஆட்சி அழைத்து பேசவில்லை. போராடியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. எனவே வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்களே, அரசு ஊழியர்களே நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் காவலராக இருந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர். அந்த தலைவர் கலைஞருடைய மகன் ஸ்டாலின் இருக்கிறேன். கவலைப்பட வேண்டாம்.
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நிச்சயமாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கருணாநிதி எப்போதும் தேர்தலை சந்திப்பதற்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அந்த தேர்தல் அறிக்கையின் தலைப்பில் “சொன்னதை செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்” என்று குறிப்பிடுவார். அதேபோல கருணாநிதியின் மகன் ஸ்டாலின் சொல்லுகிறான், ‘சொன்னதைச் செய்வான் செய்வதைத்தான் சொல்வான்’.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story