தமிழில் பெயரிடாத சினிமாபடங்களுக்கு இரட்டை வரி -விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை


தமிழில் பெயரிடாத  சினிமாபடங்களுக்கு இரட்டை வரி -விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை
x
தினத்தந்தி 25 March 2021 6:50 PM IST (Updated: 25 March 2021 6:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தனி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று விழுப்புரத்தில் வெளியிட்டார்.  அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

அரசுத் துறைகளில் மாநில அரசால் செயல்படுத்தப்படும் இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதிவெறி சக்திகளை எதிர்த்து, சகோதர உணர்வை வலுப்படுத்திட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம்.

சாதி மறுப்பு மணம்புரிந்த தம்பதியனரைப் பாதுகாக்க தனி காவல் பிரிவு உருவாக்க வலியுறுத்துவோம்.

மதவெறி சாதிவெறி சக்திகளை எதிர்ப்போம். மதசார்பின்மையை பாதுகாப்போம். சிறுபான்மை மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்வோம்.

தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம்.

கோயில் நிலங்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டு, அவற்றை ஏழைத் தமிழ் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்துப் பெண்களுக்கும் இலவசமாக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

திருநங்கையருக்கு கல்வி - வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கிடவும், அவர்கள் பாதுகாப்பாக குடியிருக்க தனியாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தரவும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

பொதுக்கிணறு, பொதுப் பாதை, பொது சுடுகாடு, பொதுக் கோயில் போன்ற அனைத்து நிலைகளிலும் பட்டியலின மக்களின் உரிமைகளை நிலைநாட்டப் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட வலியுறுத்துவோம்.

பட்டியலின இடஒதுக்கீட்டை 2011 மக்கள்தொகை அடிப்படையில் 21% ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.

ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் முறையை ஒழிக்க பாடுபடுவோம். தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பாதுகாக்கப்படும்.

ஏழு தமிழர் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்போம்.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கட்சத்தீவி மீட்புக்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில சுயாட்சி நிலைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கும் எதிரான மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை தடுக்க விசிக போராடும்.

பெண்களுக்கு 33 விழுக்காடு அமல்படுத்தவும் பின்னர் அதை 50 விழுக்காடாக உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர் பாதுகாப்பிற்கு தனி ஆணையம்

மீனவ மக்கள் மீன் பிடி தொழிலின் போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்.

100 நாள் வேலை வாய்ப்பை வேளாண்மைக்கும், சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கும் நீட்டிப்பு செய்து 200 நாளாக உயர்த்தவும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, தமிழகத்தை மின் உபரி மாநிலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Next Story