வெற்றிச்செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்வரை அலட்சியம் வேண்டாம்; அயராது உழைப்போம் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம்
வெற்றிச்செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை அலட்சியம் வேண்டாம், அயராது உழைப்போம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
தேர்தல் களத்தில் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகளாம் உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும், எல்லா திசைகளில் இருந்தும் நம்பிக்கை ஊட்டும் நல்ல செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.
தி.மு.க.வுக்கு ஆதரவாக மக்களின் மனநிலை, பேரலையாக எழுந்து உருவெடுத்து கொண்டிருக்கிறது. பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்து தமிழகத்தை அனைத்து முனைகளிலும் பாழ்படுத்திய அ.தி.மு.க.வை அந்தப்பேரலை சுருட்டி தூர எறிந்துவிடும் என்பதை தமிழக மக்கள் அளித்து வரும் கணிசமான ஆதரவு உறுதிபடுத்துகிறது.
கடமை
ஊடகங்களில் - பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளும் தி.மு.க. கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. கருத்துக்கணிப்புகள் ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனை மட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப்போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை என்பதை கருணாநிதி அடிக்கடி நினைவூட்டுவார்.
மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
சிறு தொய்வும் கூடாது
தேர்தலின் போது வாக்குகளை மக்கள் நமக்கு தருவதற்கு ஆயத்தமாக - ஆர்வமாக இருக்கிறார்கள் என்றாலும், அவற்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து சேர்க்கிற நாள் வரையிலும் நம் உழைப்பில் - கவனத்தில் ஒரு சிறு தொய்வும் ஏற்பட்டுவிடக்கூடாது.
2016-ம் ஆண்டு தேர்தலின் போது வெறும் 1.1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி கை நழுவிப் போனது. ஒரு சில தொகுதிகளில் இருந்த அலட்சியத்தின் விளைவால், தமிழகம் அடிமை ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து சிக்கி பாழ்பட்டு கிடக்கிறது.
கருணாநிதியே வேட்பாளர்
எனவே, கருத்துக் கணிப்புகள் தருகிற உற்சாகத்தைவிட, உழைப்பின் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும்தான் உண்மையான உற்சாகத்தை, ஊக்கத்தை வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ந்தேதியன்று வழங்கிடும். அதற்கேற்ப அயராது, அலட்சியம் செய்யாது பணியாற்றிட வேண்டும்.
அனைத்துத் தொகுதிகளிலும் கருணாநிதியே வேட்பாளர் என்ற திட சித்தத்துடன், வெற்றி முகடை நோக்கி ஒவ்வொரு நொடியும் உழைத்திட வேண்டும்.
கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளிலும் கழகமே போட்டியிடுகிறது என்கிற ஒற்றைச் சிந்தனையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றியினை உறுதி செய்திட வேண்டும்.
குளிர்காய நினைப்பார்கள்
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை தமிழக மக்கள் முற்றாக நிராகரிப்பார்கள் என்பதைக் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது.
அதே நேரத்தில் அவர்கள், ஆட்சியில் இருப்பதால் அதிகார துஷ்பிரயோகம் செய்து - அத்துமீறல்களில் - முறைகேடுகளில் ஈடுபட்டு தி.மு.க. கூட்டணியின் வெற்றியை தடுத்திட முனைவார்கள்.
குழப்பங்களை உருவாக்கி, தற்காலிகமாக குளிர்காய நினைப்பார்கள். குன்றிமணி அளவுகூட அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. நமது வெற்றி இலக்கும் குறைந்திடக் கூடாது.
ஓய்வு என்பதே கிடையாது
வெற்றிச்செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்வரை, நம் உன்னதமான உழைப்புக்கு ஓய்வு என்பதே கிடையாது; நம் கண்களுக்கு உறக்கம் கிடையாது; நம் சிந்தனையில்-செயல்பாட்டில் சிறிதும் சோர்வு கிடையாது.
கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியைத் தரும். சிறு துளிகள் பெருகிச் சேர்ந்து கடலாவது போல, ஒவ்வொரு வாக்கும் கவனமாகச் சேகரிக்கப்படும்போது, வெற்றியின் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும். அதனால், ஒவ்வொரு நாளும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரியுங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்.
அம்பலப்படுத்துங்கள்
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், தொலைநோக்குத் திட்டம் எனும் தலைப்பில் அறிவித்துள்ள 7 உறுதிமொழிகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை செய்யுங்கள்.
அடிமை அ.தி.மு.க.வின் அவல ஆட்சியையும் - தேர்தல் நேரத்தில் கொடுத்துள்ள மோசடி வாக்குறுதிகளையும் அம்பலப்படுத்துங்கள்.
தெருக்கள்தோறும், திண்ணைகள் தோறும் பரப்புரையைத் தொடருங்கள். மக்கள் கூடும் இடங்களில் துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு கேளுங்கள்.
அலட்சியம் வேண்டாம்
அலட்சியம் வேண்டாம்; ஒதுங்கி நிற்காதீர்; முன்னின்று செயல்படுங்கள். தோழமை சக்திகளுக்கு தோள் கொடுத்திடுங்கள்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பாடுபட்டு கண்டுள்ள விளைச்சலில், எந்தவித சேதாரமும் எக்காரணம் கொண்டும் இடையில் ஏற்பட்டுவிட அனுமதியாமல், முழு வெற்றியை அறுவடை செய்வதற்கு, கவனம் சிதறாமல் - கருத்தொன்றி அயராது உழைத்திடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story