கட்டாய மதமாற்ற தடைச் சட்ட வாக்குறுதி பா.ஜ.க. கூறுவதை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்கிறதா? கே.எஸ்.அழகிரி கேள்வி
கட்டாய மதமாற்ற தடைச் சட்ட வாக்குறுதி பா.ஜ.க. கூறுவதை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்கிறதா? கே.எஸ்.அழகிரி கேள்வி.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் சேர்ந்து சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கின்றன. ஆனால் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நீண்ட நெடுங்காலமாக செயல்பட்டு வருகிற கொள்கை கூட்டணியாகும். சமீபத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., வெளியிட்டிருக்கிற தேர்தல் அறிக்கைகள் முரண்பாட்டின் மொத்த வடிவமாக அமைந்துள்ளன. பா.ஜ.க. கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறுவதை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்கிறதா? மதச்சார்பற்ற ஒரு அரசு, இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி, இந்து கோவில்களின் நிர்வாகம் இந்து ஆன்றோர், சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கை கூறுகிறது. தமிழகத்தில் இந்து கோவில்கள் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை மிகச் சிறப்பாக கவனித்து வருகிறது. இந்த நடவடிக்கைக்கு அ.தி.மு.க. துணைபோனால் அதற்குரிய விலையை தர வேண்டிய நிலை ஏற்படும். தமிழக வாக்காளர்கள் உரிய பாடத்தை வருகிற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வழங்கப் போகிறார்கள். இதன்மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நல்லாட்சி நிச்சயம் அமையும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story