இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் போட்டி 'குடும்பத்துக்கு ரூ.1 கோடி', என தேர்தல் அறிக்கையில் தாராளம்


இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் போட்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி, என தேர்தல் அறிக்கையில் தாராளம்
x
தினத்தந்தி 26 March 2021 4:57 AM IST (Updated: 26 March 2021 4:57 AM IST)
t-max-icont-min-icon

இந்து மக்கள் கட்சி, 72 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது என்று அர்ஜூன் சம்பத் கூறினார். குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை தொடங்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தும் ஒருவர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.

அக்கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் கிளப்பில் நேற்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவலறிந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு

இதுகுறித்து அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் சுயேச்சையாக களம் இறங்கி உள்ளது. இந்து மக்கள் கட்சி போட்டியிடாத இடங்களில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம். குறிப்பாக பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவோம். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இந்துக்களுக்கு சலுகைகள் இரட்டை வேடம், கபட நாடகம். இந்த தேர்தலில் எங்களுடைய முக்கிய குறிக்கோள் இந்து வாக்கு வங்கியை ஒன்றிணைப்பது.

ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன்

இந்து மக்கள் கட்சி, பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன். தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்று ஒரு சில தினங்களில் இந்து மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.1 கோடி அறிவிப்பு

அதன்பின்னர் இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அர்ஜூன் சம்பத் வெளியிட்டார். அதில்,‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். ஒரு குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்குவோம். ராமேஸ்வரம் புனித தீவாக அறிவிக்கப்படும். மெரினா கடற்கரைக்கு தமிழர் கடற்கரை என்று பெயர் சூட்டப்படும். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வள்ளுவன் கோட்டையாக மாற்றப்படும்' போன்ற பல தாராள அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

Next Story