கோவை மாவட்டத்தை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அதிரடியாக இடம் மாற்றம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு


கோவை மாவட்டத்தை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அதிரடியாக இடம் மாற்றம் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 26 March 2021 5:57 AM IST (Updated: 26 March 2021 5:57 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தை தொடர்ந்து திருச்சி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை, 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வருமான வரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது கொடுக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்படுகின்றன.

இந்த புகார் குறித்த உண்மை நிலவரத்தை அந்தந்த தொகுதியில் உள்ள தேர்தல் பார்வையாளர்கள் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் அறிந்து உரிய உத்தரவு பிறப்பித்து வருகிறது. அந்த வகையில் எதிர்க்கட்சி புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் கோவை மாவட்ட கலெக்டரும், கோவை போலீஸ் கமிஷனரும் இட மாற்றம் செய்யப்பட்டனர்.

திருச்சி கலெக்டர் மாற்றம்

இந்தநிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவிற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேய்மாலிக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சியில் 1 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு பார்வையாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 25-ந்தேதி சில அதிகாரிகள் இடம் மாற்றம் தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.ராஜன் தேர்தல் பணி இல்லாத பணிக்கு மாற்றப்படுகிறார். கோவை தலைமையக போலீஸ் துணை கமிஷனர் ஏ.மயில்வாகனன், திருச்சி போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்படுகிறார்.

உத்தரவு

திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்படுகிறார். எஸ்.திவ்யதர்ஷினி திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தேர்தல் அல்லாத பணிக்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறார். விசுமகாஜன் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கையை 26-ந்தேதி (இன்று) பிற்பகல் 1 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story