எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை திருடினார் உதயநிதி ஸ்டாலின்; பா.ஜ.க. நிர்வாகி பரபரப்பு புகார்


எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை திருடினார் உதயநிதி ஸ்டாலின்; பா.ஜ.க. நிர்வாகி பரபரப்பு புகார்
x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை திருடியுள்ளார் என பா.ஜ.க. நிர்வாகி போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது.  வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.

இதில், தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி 174 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதி வேட்பாளராக தொடர்ந்து 3வது முறையாக போட்டியிடுகிறார்.  சேப்பாக்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஸ்டாலினின் மகன் மற்றும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.  அவர், சாத்தூர் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டபோது, மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறி ஒரு செங்கல்லை உயர்த்தி காட்டினார்.

உதயநிதியின் இந்த பிரசாரம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து தனது பிரசார கூட்டங்களில் எய்ம்ஸ் தொடர்பான செங்கல் பிரசாரத்தை அவர் மேற்கொண்டார். அடுத்த நாள் பிரசார கூட்டத்தில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட இன்னொரு செங்கல்லை எடுத்து வந்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை திருடியுள்ளார் என கூறி அவர் மீது பா.ஜ.க. நிர்வாகி நீதிபாண்டியன் என்பவர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

Next Story