சென்னையில் ஜே.பி.நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் அ.தி.மு.க.வுக்கும் ஆதரவு திரட்டினார்


சென்னையில் ஜே.பி.நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் அ.தி.மு.க.வுக்கும் ஆதரவு திரட்டினார்
x
தினத்தந்தி 26 March 2021 11:10 PM GMT (Updated: 26 March 2021 11:10 PM GMT)

சென்னை துறைமுகம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதேவேளை அ.தி.மு.க.வுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து, சவுகார்பேட்டையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தமிழக மீன்வளத்துறை அமைச்சரும், ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான டி.ஜெயக்குமார் ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டனர்.

பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் இருந்து மிண்ட் பகுதி வரை திறந்த வாகனத்தில் ஜே.பி.நட்டா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஜே.பி.நட்டாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாடிகளில் இருந்து பூக்களை தூவி வரவேற்றனர். பதிலுக்கு ஜே.பி.நட்டாவும் கூடியிருந்த பொதுமக்கள் மீது மலர்களை தூவி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

2ஜி, 3ஜி, 4ஜி ஊழல்

தேர்தல் பிரசாரத்தின்போது ஜே.பி.நட்டா பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். தமிழக மக்கள் நன்கு புரிந்தவர்கள். அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2ஜி, 3ஜி, 4ஜி ஊழல்களை மறக்கவில்லை. 2ஜி என்பது மாறன் சகோதரர்களின் ஊழல், 3ஜி என்பது 3 தலைமுறை அதாவது மு.க.ஸ்டாலின் குடும்பம் செய்த ஊழல். 4ஜி என்பது காந்தி (ராகுல் காந்தி) குடும்பத்தின் 4-வது தலைமுறை செய்த ஊழல். தி.மு.க. என்பதற்கு வாரிசு அரசியல், பணம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து என்பதுதான் பொருள். ஊழல்வாதிகள் இப்போது தேர்தல் என்பதால் மக்களிடம் வந்து வாக்கு கேட்கிறார்கள்.

தமிழகத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ரூ.3 ஆயிரத்து 760 கோடி நிதியை யார் கொடுத்தது? 11 மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதியை யார் தந்தது? மதுரைக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை யார் தந்தது? 2 ஆஸ்பத்திரிகளை பன்னோக்கு ஆஸ்பத்திரிகளாக தரம் உயர்த்தியது யார்? காங்கிரஸ் அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை, உடைத்தெறிந்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வைத்தது யார்? (அனைவரும் மோடி என்று குரல் எழுப்புகிறார்கள்).

உலகளவில் தமிழகம்

இதை அனைத்தையுமே உலகளவில் தமிழகத்தை பெருமைப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திரமோடி செய்து தந்துள்ளார். மோடி அரசு கொடுத்த நிதிகளை அ.தி.மு.க. அரசு தமிழக மக்களின் நலனுக்காக செலவிட்டது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசுடன் இணைந்து, அ.தி.மு.க. அரசு சிறப்பாக செய்து வருகிறது.

எனவே நல்ல வளமான வாழ்வுக்காக பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு ‘தாமரை’ சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இதேபோல அமைச்சர் ஜெயக்குமாரையும் ‘இரட்டை இலை’ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டியது நம்முடைய பொறுப்பு. இதனை நீங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் பிரசாரத்தில் ஜே.பி.நட்டா இந்தி மொழியிலேயே பேசினார்.

சவுகார்பேட்டை வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அங்கு தமிழ் மொழிபெயர்ப்புக்கான அவசியம் எழவில்லை.

தேர்தல் வாக்குறுதி கையேடு

முன்னதாக பிரசாரத்தின்போது துறைமுகத்தில் பா.ஜ.க. முன்னெடுக்கவுள்ள வளர்ச்சிப்பணிகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவை அடங்கப்பெற்ற துறைமுகம் தொகுதிக்கான பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி கையேட்டை ஜே.பி.நட்டா வெளியிட்டார். பின்னர் வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தார்.

Next Story