வாழ்நாள் முழுவதும் சோறு போடாது 'இலவசங்கள் என்பது ஒருநாள் விருந்து போன்றது' சென்னை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு


வாழ்நாள் முழுவதும் சோறு போடாது இலவசங்கள் என்பது ஒருநாள் விருந்து போன்றது சென்னை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 26 March 2021 11:13 PM GMT (Updated: 2021-03-27T04:43:11+05:30)

இலவசங்கள் என்பது ஒருநாள் விருந்து போன்றது. அது வாழ்நாள் முழுவதும் சோறு போடாது என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினாலும், மற்ற தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பொன்ராஜூக்கு ஆதரவாக அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. மார்க்கெட்டில் திறந்தவேனில் நின்றபடி ‘டார்ச் லைட்' சின்னத்துக்கு நேற்று வாக்குகள் திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். எப்படியாவது பணம் சம்பாதித்து விடலாம் என்ற எண்ணம் கிடையாது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள், ‘தொகுதியில் என்னென்ன தேவை என்பதை புரிந்துகொண்டு, அதை இந்த காலகட்டத்துக்குள் செய்து கொடுப்போம்' என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்கள். இந்த தைரியம் நேர்மையானவர்களுக்கு மட்டும்தான் வரும். அப்படிப்பட்ட கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.

நைந்து போன தமிழகம்

நான் எம்.எல்.ஏ. என்று மார்தட்டி, நெஞ்சை நிமிர்த்தி ரவுடி போல இருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வரவில்லை. ‘நேற்று இப்படி இருந்த இடம், இன்று இப்படி மாறி இருக்கிறது' என்று பெருமையுடன் உங்கள் இடத்தை உங்களுக்கு சுற்றி காட்டும் சுற்றுலா வழிகாட்டி போன்று இருப்பார்கள்.

50 ஆண்டுகள் அஜாக்கிரதையாலும், பேராசையாலும் நைந்து போன தமிழகத்தை சீரமைக்க வேண்டியது எங்கள் கடமை என்று நினைத்து வந்திருக்கிறேன். அதற்கான அனுமதியை நீங்கள் தர வேண்டும். அதை ஏப்ரல் 6-ந்தேதி (தேர்தல் நாள்) நீங்கள் செய்ய வேண்டும். அந்த விதையை நீங்கள் தூவினால் எதிர்கால சந்ததி உங்களை வாழ்த்தும்.

ஒருநாள் விருந்து

இலவசங்கள் ஒரு போதும் ஏழ்மையை போக்கவே போக்காது. ஒரு நாள் விருந்து வைத்தால் வாழ்நாள் முழுவதும் அது சாப்பாட்டுக்கு வழி காணாது. உழைப்புக்கு வழி தேடி தந்தால், வேலை தேடி கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் சோறு போடும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

அண்ணாநகர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரசாரத்தின்போது கமல்ஹாசன் ‘ஆன்லைன் ' மூலம் அவரிடம் பேசி நலம் விசாரித்தார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வைத்தீஸ்வரன் (அம்பத்தூர்), உதயகுமார் (ஆவடி) ஆகியோரை ஆதரித்தும் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார்.

Next Story