அதிக புகார்கள் வருவதை தொடர்ந்து கரூர் மாவட்டத்துக்கு கூடுதல் தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்


அதிக புகார்கள் வருவதை தொடர்ந்து கரூர் மாவட்டத்துக்கு கூடுதல் தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்
x
தினத்தந்தி 27 March 2021 12:13 AM GMT (Updated: 27 March 2021 12:13 AM GMT)

அதிக புகார்கள் வருவதை தொடர்ந்து கரூர் மாவட்டத்துக்கு கூடுதல் தேர்தல் செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.

சென்னை, 

தமிழகம் முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 497, 12-டி தபால் ஓட்டுகள் (80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள்) உள்ளன. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 646 தபால் ஓட்டுகள் உள்ளன. அங்கு தபால் ஓட்டு பதிவு 27-ந் தேதி (நாளை) தொடங்குகிறது. இதற்கான குழுவினர், தபால் ஓட்டுகளை பெறுவர்.

கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் தபால் ஓட்டு பதிவு 25-ந் தேதி தொடங்கியது. மற்ற மாவட்டங்களில் அடுத்தடுத்த நாட்களில் தொடங்கும். குறைந்த அளவாக 562 தபால் ஓட்டுகள் தேனியில் உள்ளன.

ரகசிய தகவல்கள்

திருச்சியில் ரூ.1 கோடி கைப்பற்றப்பட்டது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் அறிக்கைகளை அளித்திருந்தாலும், சிறப்பு தேர்தல் பார்வையாளர்களின் கருத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் பெற்றிருக்கும். அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.

பொதுவாக மாவட்டங்களில் நிலவும் இதுபோன்ற பிரச்சினைகளில், அனைத்து தரப்பில் இருந்தும், அரசியல் கட்சிகளிடம் இருந்தும்கூட கருத்துகளை ஆணையம் பெறும். அதெல்லாம் ரகசியமாக வைக்கப்படும்.

இழப்பீடு

திருவண்ணாமலையில் நடந்த சோதனை தொடர்பான விவரங்களை வருமான வரித்துறைதான் அளிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை வருமான வரித்துறை மூலமாக ரூ.44.42 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் இருக்கும்போது இறக்கும் பணியாளர்கள், காயமடைவோருக்கு முறையே ரூ.15 லட்சம் மற்றும் ரூ.7.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.

சிவகங்கை அருகே பறக்கும்படையினர் வாகன சோதனை மேற்கொள்ளும்போது அரசு பஸ் மோதியதில் 4 போலீசார் காயமடைந்தனர். அதில் 2 பேர் இறந்துவிட்டனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

கூடுதல் பார்வையாளர்

கரூரில் இருந்து அதிக புகார்கள் வருவதாக கூறுகிறீர்கள். அப்படி இருக்கும்போது தொகுதிகளில் கூடுதல் கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

பல்வேறு புகார்களை பெற்றுள்ள இந்திய தேர்தல் ஆணையம், தற்போது கரூர் மாவட்டத்துக்கு கூடுதல் செலவின பார்வையாளர் ஒருவரை அனுப்பியுள்ளது. முன்பு கரூர் மாவட்டத்தில் இருக்கும் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய தொகுதிகளுக்கு பியூஸ் பட்டி என்ற அதிகாரி செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

தற்போது கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்காக புதிதாக தீபக்குமார் (ஐ.டி.எஸ்.) என்ற அதிகாரியை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. எனவே பியூஸ் பட்டி, அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய தொகுதிகளை மட்டும் கவனிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story