வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் வாக்குகளை சேகரித்தனர்


வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் வாக்குகளை சேகரித்தனர்
x
தினத்தந்தி 27 March 2021 5:50 AM IST (Updated: 27 March 2021 5:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபை தேர்தலில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் வாக்குகளை சேகரித்தனர்.

சென்னை, 

தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் (ஏப்ரல்) 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.

இதில், ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், மூன்றாம் பாலினத்தினர் 7 ஆயிரத்து 192 பேரும் அடங்குவார்கள்.

வழக்கமான தேர்தலைவிட, இந்த தேர்தலில் கொரோனா பரவலும் குறுக்கிடுவதால், வாக்குப்பதிவுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர்கள் நெருக்கத்தை குறைக்கும் வகையில், கடந்த தேர்தலில் 68 ஆயிரமாக இருந்த வாக்குச்சாவடிகள் இந்த தேர்தலில்88 ஆயிரத்து 937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கான நேரமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு அன்று ஓட்டுப்போட வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அவர்களுக்கு கையுறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குப்பதிவு

அதே நேரத்தில், வயதானவர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து அதிகம் இருப்பதால், 80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டுப்போட இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரெயில் ஓட்டுநர்கள், விமான பைலட்டுகள், கப்பல் மாலுமிகள், கொரோனா நோயாளிகள், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் ஓட்டளிக்க தகுதியானவர்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 80 வயதை கடந்தவர்கள் மொத்தம் 12 லட்சத்து 87 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில், 1 லட்சத்து 49 ஆயிரத்து 567 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இதேபோல், மாற்றுத்திறனாளிகள் 45 ஆயிரத்து 397 பேரும், ரெயில், விமானம், கப்பலில் பணியாற்றுபவர்கள் 35 பேரும் தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர்.

சேலத்தில் அதிகம்

தபால் வாக்களிப்பதற்கான அனைத்து நடைமுறைகளும் கடந்த 16-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6-ந் தேதி வாக்குச்சாவடிகளுக்கு வந்துதான் ஓட்டுப்போட முடியும்.

இந்த நிலையில், தபால் வாக்களிக்க விண்ணப்பித்த 1 லட்சத்து 94 ஆயிரத்து 999 பேரில், 1 லட்சத்து 38 ஆயிரத்து 497 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தபாலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 646 பேரும், குறைந்த அளவாக தேனியில் 562 பேரும் தபால் மூலம் வாக்களிக்க இருக்கின்றனர்.

முன்கூட்டியே தகவல்

இதற்கிடையே, தபால் வாக்கை பெறும் பணி நேற்று காலை முதல் தொடங்கியது. முதல் நாளில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

ஏப்ரல் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தேர்தல் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று தபால் வாக்கை மூடிய சீல் வைக்கப்பட்ட பெட்டியில் பெற்றுக்கொள்வார்கள். ஒரே நாளில் அனைவரின் வீடுகளுக்கும் சென்று தபால் வாக்கை பெற முடியாது என்பதால், 200 முதல் 300 பேர் வரை தேர்வு செய்து தபால் வாக்கு பெறப்பட்டு வருகிறது. இதற்கான தகவல் வாக்காளர்களுக்கு முன்கூட்டியே எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படுகிறது.

ஓட்டுப்போட முடியாது

தபால் வாக்குகளை பெற வாக்குப்பதிவு அலுவலர்கள் 2 பேர், நுண் பார்வையாளர், காவலர் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் ஆகியோர் செல்கின்றனர். தபால் வாக்கு அளிப்பவர்களிடம் வீட்டுக்குள் வைத்துத்தான் வாக்குப்பெட்டியில் வாக்குகள் பெறப்பட்டன. இந்த நடைமுறைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவும் செய்யப்பட்டன. தேர்தல் அதிகாரிகளுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஏஜெண்டுகளும் உடன் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தபால் வாக்களிக்க விண்ணப்பித்தவர்கள், குறிப்பிட்ட நாளில் வீட்டில் இருக்கும்படி முன்கூட்டியே அறிவுறுத்தப்படுவார்கள். 2 முறை சென்றும் அவர்கள் வீட்டில் இல்லை என்றால், மீண்டும் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்தல் நாளிலும் (ஏப்ரல் 6-ந் தேதி) அவர்கள் ஓட்டுபோட முடியாது.

சென்னை

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் உள்ள 1.20 லட்சம் பேரிடம் படிவம் 12-டி வழங்கப்பட்டது. இதில் 12 ஆயிரம் பேர் படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களிடம் வழங்கினர்.

இந்த படிவங்கள் உரிய பரிசீலனைக்கு பின் 6 ஆயிரத்து 992 முதியோர்கள், 308 மாற்றுத்திறனாளிகள் என 7 ஆயிரத்து 300 பேர் தபால் ஓட்டு அளிக்க தகுதி பெற்றனர். இதற்கான தபால் ஓட்டுகள் வீடுகளுக்கே சென்று பெறும் பணி நேற்று தொடங்கப்பட்டது.

50 பேருக்கு மேல்...

இதில் 70 குழுக்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் தினமும் 15 பேரிடம் தபால் வாக்கு பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவின் போது, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டதுடன் வீடியோ பதிவும் செய்யப்பட்டு அனைத்தும் ஆவணங்களும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி நேற்று சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் 50-க்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டுப்பதிவு செ‌ய்தனர். அதனை வாக்குப்பதிவு அலுவலர் பெற்றுக்கொண்டு தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

வாக்கு எண்ணிக்கை நாளில் முதலில் எண்ணப்படும்

நேற்று முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் பெறப்படும் தபால் ஓட்டுகள், மூடி சீல் வைக்கப்பட்ட பெட்டிகளில், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் பாதுகாப்பாக வைக்கப்படும். மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முதலில் தபால் வாக்‌குகளே எண்ணப்படும்.

Next Story