இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான் - முதலமைச்சர் பழனிசாமி


இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 28 March 2021 12:17 PM GMT (Updated: 28 March 2021 12:17 PM GMT)

இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று சென்னை, ராயபுரம் கல்மண்டபம் சாலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்தும் திரு.வி.க. நகர் தொகுதி த.மா.கா. வேட்பாளர் கல்யாணியை ஆதரித்தும் முதலமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

"செழிப்பாக, அமைதியாக தமிழகம் இருக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் அதிமுக அரசு மீண்டும் வரவேண்டும். இந்தியாவிலேயே அமைதி பூங்காவாக இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழகம்தான். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்போம். 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 62 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2006 - 2011 வரை தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடைபெற்றது. கடுமையான மின்வெட்டு இருந்தது. அம்மா ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் மின் விநியோக மாநிலமாக இருக்கிறது. தேவைக்கு அதிகமாக மின்சாரம் கிடைக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக வாழும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்.

வெற்றி நடை போடும் தமிழகம் என்பதை அதிமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. இதை சொன்னாலே ஸ்டாலின் அலறுகிறார். திமுகவின் ஆட்சியில் ஸ்டாலின் குடும்பத்துக்கு தான் வளர்ச்சி கொடுத்து கொண்டார்கள். தமிழகத்தை வீழ்ச்சியடையவே அவர்கள் செய்தார்கள். நான் எதை நினைத்தாலும் அஞ்சாமல் சாதிப்பேன். எதற்கும் அஞ்ச மாட்டேன். 

தமிழகத்தின் குற்றங்களை கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பகுதியில் குற்றம் நடந்தால் உடனடியாக சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story