என் தாயை பற்றி இழிவாக பேசுவதா? - பிரசாரத்தின் போது கண்கலங்கிய முதலமைச்சர்!


என் தாயை பற்றி இழிவாக பேசுவதா? - பிரசாரத்தின் போது கண்கலங்கிய முதலமைச்சர்!
x
தினத்தந்தி 28 March 2021 2:02 PM GMT (Updated: 2021-03-28T19:32:31+05:30)

என் தாயை பற்றி இழிவாக பேசிய ஆ.ராசாவிற்கு இறைவன் தக்க தண்டனை வழங்குவார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை, திருவொற்றியூரில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். சிறிது நேரம் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்ற அவர், பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அதன் பிறகு பேசியதாவது;-

'திமுகவினர் திட்டமிட்டு என் மீது அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள். திமுகவினர் தாய்மார்களை மதிக்கவில்லை. சிந்தித்துப் பாருங்கள். நான் முதல்வராக இருக்கிறேன். இதை இங்கு பேசக்கூடாது என்றுதான் வந்தேன். ஆனால், இங்கு தாய்மார்களைப் பார்த்ததால் பேசுகிறேன்.

என் தாய்க்காக மட்டும் நான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு தாயாகப் பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். ஆக, ஒரு சாதாரண மனிதன் முதல்வராக இருந்தால் என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?

என் தாய் கிராமத்தில் பிறந்தவர், விவசாயி, இரவு பகலாகப் பாடுபட்டவர். அவர் இறந்துவிட்டார். அவரைப் பற்றி இழிவாக, தரக்குறைவாக எப்படியெல்லாம் பேசினார். ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை. 

ஏழையாக இருந்தாலும், பணக்காரராக இருந்தாலும் தாய் என்பவர்தான் உயர்ந்த ஸ்தானம். யார் தாயை இழிவாகப் பேசினாலும் ஆண்டவன் நிச்சயமாகத் தகுந்த தண்டனை வழங்குவான். என் தாயை பற்றி இழிவாக பேசிய ஆ.ராசாவிற்கு இறைவன் தக்க தண்டனை வழங்குவார். தாய்மார்களை இழிவுபடுத்தி, கொச்சைப்படுத்திப் பேசுபவர்களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.

இவர்கள் எல்லாம் ஆட்சி, அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுடைய நிலைமை என்ன ஆவது? தாய்மார்களின் நிலைமை என்ன ஆவது? சிந்தித்துப் பாருங்கள். இப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் வந்துவிட்டால் எப்படி அராஜகம் செய்வார்கள், எப்படிப் பெண்களை இழிவுபடுத்துவார்கள் என்பதை மட்டும் எண்ணிப் பார்க்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story