இந்த தேர்தலுக்கு பிறகு திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது - டாக்டர் ராமதாஸ்


இந்த தேர்தலுக்கு பிறகு திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது - டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 28 March 2021 4:31 PM GMT (Updated: 28 March 2021 4:31 PM GMT)

ராணிப்பேட்டை ஆற்காட்டில் பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகனை ஆதரித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்குசேகரித்தார்.

ராணிப்பேட்டை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில்,ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகனை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்குசேகரித்தார். அப்போது பேசிய அவர், 

அதிமுக தேர்தலில் அறிக்கை அமுதசுரபி. அதிமுக - பாமக தேர்தல் அறிக்கை என்பது அரசிதழில் வெளியானது போல. அனைத்தும் நிறைவேற்றப்படும். திமுக தேர்தல் அறிக்கை அப்படி இல்லை. காப்பியடித்த தேர்தல் அறிக்கை, அது திவாலாகிவிடும்.

இந்த தேர்தலோடு திமுக அத்தியாயம் முடிவுக்கு வரும். இந்த தேர்தலுக்கு பிறகு திமுக என்ற ஒரு கட்சியே இருக்காது. தமிழகத்தில் இந்த தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். 

ஆற்காட்டில் புறவழிச்சாலை கொண்டு வரப்படும். ஆற்காடு நகர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தொகுதியில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

கடந்த 4 ஆண்டுகளில் பழனிசாமி ஆட்சியில் எந்த குறையும் கூற முடியாது. சிறப்பான ஆட்சியை பழனிசாமி தந்துள்ளார். அவரது ஆட்சி தொடர வேண்டும் என்பதால் அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story