தி.மு.க. தலைவரிடம் எடுத்து கூறி ‘வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன்’ உதயநிதி ஸ்டாலின் உறுதி


தி.மு.க. தலைவரிடம் எடுத்து கூறி ‘வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன்’ உதயநிதி ஸ்டாலின் உறுதி
x
தினத்தந்தி 29 March 2021 5:20 AM IST (Updated: 29 March 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. தலைவரிடம் எடுத்து கூறி வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் என்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணி நாதமுனி செட்டி தெருவில் உள்ள ராமானுஜ கூடத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வி.பி.மணி தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்கம் சார்பில் 19 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு மற்றும் திருவல்லிக்கேணியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் அடங்கிய மனுவை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.

உங்கள் வீட்டு பிள்ளை

பின்னர், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட தி.மு.க. தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளேன். நீங்கள் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நானும் திருவல்லிக்கேணி தொகுதியை சுற்றிவருவதை விட தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறேன். குறிப்பாக 8 அல்லது 9 நாட்கள் மட்டுமே திருவல்லிக்கேணி தொகுதியில் பிரசாரம் செய்ய வந்து உள்ளேன்.

கண்டிப்பாக வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்துவிடுவீர்கள் என்பதால் தான் மாநிலம் முழுவதும் சுற்றி வருகிறேன். கருணாநிதியின் பேரப்பிள்ளை, திருவல்லிக்கேணியின் செல்லப்பிள்ளை என்கிறீர்கள், ஆனால் நான் கடைசி வரை உங்கள் வீட்டு பிள்ளையாகவே இருப்பேன்.

முன்மாதிரி தொகுதி

கருணாநிதியை 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்பினீர்கள். அதேபோல் மறைந்த ஜெ.அன்பழகனையும் நீங்கள் வெற்றி பெற வைத்து சட்டசபைக்கு அனுப்பி வைத்தீர்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோதே அவர் இந்த தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை செய்து கொடுத்து உள்ளார். அதை யாரும் மறுக்க முடியாது. வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கப்போவது உறுதி.

மொத்தத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றி காட்டுவேன்.

வணிகர்களின் கோரிக்கை

வணிகர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கைகளை என்னால் முடிந்த அளவு எவ்வளவு விரைவாக முடித்து கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து கொடுப்பேன். உங்களுடைய ஆதரவு உதயசூரியன் சின்னத்திற்கு தேவை. இந்த நேரத்தில் உங்களிடம் நான் கேட்டு கொள்வது எல்லாம், தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டீர்கள். வெற்றியை தேடி தரப்போகிறீர்கள். அதுமட்டும் இல்லாமல் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் தமிழ்நாடு முழுவதும் இருப்பார்கள். அவர்களிடமும் தி.மு.க.விற்கு வாக்களிக்க கேட்டு கொள்ள வேண்டும்.

உங்கள் கோரிக்கையை தி.மு.க. தலைவரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உதயநிதிக்கு வேல்

நேற்று பங்குனி உத்திரம் என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு வேல் ஒன்றை நினைவு பரிசாக வழங்குவதாக கூறி வி.பி.மணி வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு, வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் ஏ.பால்பாண்டியன், பொருளாளர் எம்.காசிப்பாண்டியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story