பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி


பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 29 March 2021 6:09 AM GMT (Updated: 29 March 2021 6:09 AM GMT)

பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,

சென்னை, 

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளநிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் நடராஜை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிச் சென்றவர் ஜெயலலிதா. அரசு செய்து முடித்த திட்டங்களை கூறி நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் நகரமாக சென்னை உள்ளது. சென்னையில் அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குற்றங்கள் குறைந்துள்ளன. சென்னையில் மட்டும் குற்றங்களை தடுக்க 2.5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை அமைதிப்பூங்காவாக இருந்தால் தான் தொழில் நடக்கும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. 

இந்தியாவிலேயே அதிக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட மாநிலம் தமிழகம். தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மழை, புயல், வெள்ளம் என அனைத்து நேரங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இல்லத்தரசிகளின் சுமையை குறைக்க தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு, அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்படுகிறது. மேயராக இருந்த போதும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் சென்னைக்கு ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை” என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Next Story