ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 March 2021 10:08 PM GMT (Updated: 29 March 2021 10:08 PM GMT)

ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை, 

சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். விஸ்வநாதன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நான் எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி ஆவடி, எடப்பாடி, சேலம் வடக்கு, ஈரோடு கிழக்கு, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஆவடி தவிர மற்ற தொகுதிகளில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி தொகுதியில் பொதுச் சின்னங்களின் பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா இருந்தும் அந்த சின்னத்தை அங்கு போட்டியிடும் எனக்கு ஒதுக்கவில்லை. எனவே, ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும். ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், சின்னங்கள் கேட்பது, ஒதுக்குவதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால் மனுதாரரின் கோரிக்கையை இனி பரிசீலிக்க வாய்ப்பில்லை என்று கூறினார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story