பெண்களை மதிக்கத்தெரியாத கட்சி ‘தி.மு.க.வை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டனர்’ தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு


பெண்களை மதிக்கத்தெரியாத கட்சி ‘தி.மு.க.வை புறக்கணிக்க மக்கள் தயாராகி விட்டனர்’ தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2021 4:30 AM IST (Updated: 30 March 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

பெண்களை மதிக்கத் தெரியாத தி.மு.கவை புறக்கணிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என தேர்தல் பிரசாரத்தின்போது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சென்னை, 

புவனகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து, பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கம்மாபுரத்தில் பேசியதாவது:-

தி.மு.க. ஒரு கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. இங்கே நம் கூட்டணியில் ஒரு விவசாயி முதல்-அமைச்சராக வந்திருக்கிறார். அவர் மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. தி.மு.க.வினருக்கு பெண்களை மதிக்கத் தெரியாது.

2 நாட்களுக்கு முன்பு தி.மு.க.வின் கொள்கைபரப்புச் செயலாளர் ஆ ராசா, முதல்-அமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசினார். ஆனால் அதைவிட முதல்-அமைச்சரின் தாயைப் பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினார். அவரும் ஒரு தாய் வயிற்றில்தான் பிறந்தார். ஒரு தாயைப் பற்றி யாராவது அப்படி பேசலாமா? அது முதல்-அமைச்சராக இருக்கட்டும் அல்லது யார் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஒரு தாயைப் பற்றி யாராவது தவறாகப் பேச முடியுமா? அதை நாம் மன்னிப்போமா? சும்மா விட்டுவிடுவோமா?

தி.மு.க.வை புறக்கணிக்க மக்கள் முடிவு

இதில் இருந்து என்ன தெரிகிறதென்றால் தி.மு.க. பெண்களை மதிப்பது கிடையாது. தாய்மையை மதிப்பது கிடையாது. ஆ.ராசா பேசுவதை மு.க.ஸ்டாலின் ரசித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கண்டனம் கூட கிடையாது. இதுவே பா.ம.க.வில் யாராவது பேசியிருந்தால் அவரை கட்சியிலிருந்து நீக்கியிருப்போம்.

ஸ்டாலின், ராசாவை பார்த்து என்ன சொல்கிறார் தெரியுமா? கொஞ்சம் பாத்து பேசு ராசா. இதுதான் கண்டனமா? தி.மு.க.வை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தாய்மார்களும், பெண்களும் முடிவு செய்துவிட்டார்கள். ஒரு விவசாயி மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று முதலில் விவசாயிகள் முடிவு செய்துவிட்டார்கள். இன்று பெண்களும் முடிவு செய்துவிட்டார்கள்.

நிம்மதியாக இருக்க முடியாது

தி.மு.க. ஆட்சியில் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து என மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. இந்த ஆட்சி அமைதியாக உள்ளது, சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. நமக்கு ஒரு விவசாயிதான் மீண்டும் முதல்-அமைச்சராக வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story