அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள் - கமல்ஹாசன்


அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 30 March 2021 5:15 AM GMT (Updated: 30 March 2021 5:15 AM GMT)

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிகளுடன் இந்த தேர்தலில் களமிறங்கி உள்ளன. 

இந்நிலையில் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ள துப்புரவு தொழிலாளர்கள் நாங்கள் என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “நாற்காலியை பிடித்துக்கொண்டு நகரமாட்டேன் என்பவர்கள் மக்களுக்கு வேண்டாம்; மக்களுடன் மக்களாக இருப்பவர்கள் தான் வேண்டும். தாய்மார்களுக்கு நான் குழந்தையாக தெரிகிறேன், சிறுவர்களுக்கு இந்தியன் தாத்தாவாக தெரிகிறேன். நம்மைப் பார்த்து பயந்த காரணத்தால் எதிர்க்கட்சியினர் நம்மை தொந்தரவு செய்கிறார்கள். அரசியல் சாக்கடை என்பதை தெரிந்தே அதனை சுத்தம் செய்ய வந்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். அதற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும். வரும் 6ம் தேதி அதற்கான வேலையை நீங்கள் சரியாக செய்ய வேண்டும். நான் ஹெலிகாப்டரில் செல்வதை கேலி பேசுகிறார்கள். அடுத்தமுறை அவர்களுக்கும் அது தேவைப்படும்” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

முன்னதாக மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா, பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் ரேவதி மணிமேகலை ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வளசரவாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “புதிய மாற்றத்துக்கான அரசியலை நீங்கள் தொடங்கப் போகிறீர்கள். உங்கள் சேவையில் அதிக நாள்கள் இருக்க முடியும்,என்னை விட என் கட்சி இளையது. அதுபோன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக ஒட்டு போடும் இளைஞர்கள் அதிகம் வந்துள்ளனர் அவர்களால்தான் மாற்ற முடியும். புதுச்சேரியில் இருந்து வருகிறேன். அங்கு பிரதமர் வரவுள்ளதால் 144 உத்தரவு போடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களை சந்திக்க 144 தடை போடுகிறார்கள். நமது நாடு அப்படி உள்ளது.

சட்டத்துக்கு உட்பட்டு ஜெயிக்கக் கூடிய கட்சி, மக்கள் நீதி மய்யம் என்பதை நீங்கள் அளிக்க வேண்டும். புரட்சி என்றால் ரத்தம், வெடிகுண்டு வெடிக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல; வீரத்தின் உச்ச கட்டம் அகிம்சை. எங்கள் வேட்பாளர்கள் யார் மீதும் குற்ற வழக்கு இல்லை; கட்ட பஞ்சாயத்து இல்லை. இந்த தலைமை நல்லவர்களை தேடிப் போகும். மக்களின் ஆட்சி தருவோம். காமராஜர் மக்களில் ஒருவர். அதனால்தான் மக்கள் ஆட்சி என்கிறோம். அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறினார்.

Next Story