சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன; பொதுத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பு - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு


சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன; பொதுத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பு - சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 30 March 2021 7:01 AM GMT (Updated: 30 March 2021 7:01 AM GMT)

பாஜக ஆட்சியில் நாட்டில் உள்ள பொதுத்துறைகள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

நாகை, 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தலை சுமூகமாக முடிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி திருக்குவளை பகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

பிரசார கூட்டத்தில் பேசிய சீதாராம் யெச்சூரி, தமிழகத்தை பாதுகாக்க ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என கேட்டு கொண்டார்.  ஸ்டாலின் முதல்வரானவுடன், வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பாஜக ஆட்சியில் நாட்டில் உள்ள பொது துறைகள் அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. சிறு தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன. கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு சென்ற பாக்கியம் திருக்குவளையில் கிடைத்தது. மனித தன்மை அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பதை கருணாநிதியிடம் கற்றுக்கொண்டேன்’ என்றார்.

Next Story