பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி


பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 30 March 2021 2:21 PM IST (Updated: 30 March 2021 2:21 PM IST)
t-max-icont-min-icon

பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தாராபுரம்,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை கோவை வரும் அவர் அங்கிருந்து கேரளா மாநிலம் பாலக்காடுச் என்ரார். அங்கு பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டத்தில் பேசினார். 

பின்னர் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “பாஜக தமிழகத்திற்கு அதிக திட்டங்களை அளித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு போதிய நிதியினை ஒதுக்கி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு நாட்டை இருளில் தள்ளியது காங்கிரஸ் கட்சி. ஒட்டுமொத்த நாட்டையும் காங்கிரஸ் கட்சி பின்னோக்கி இழுத்துள்ளது. 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை வரக் காரணமாக இருந்ததே காங்கிஸ் - திமுக கூட்டணிதான். ஆனால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்கியவர் பிரதமர் மோடி. தமிழகத்தைப் பொருத்தவரை நரேந்திர மோடிதான் ஜல்லிக்கட்டு நாயகன். அனைவருக்கும் வீடு என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்குள் தமிழகத்திலுள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். தமிழகத்தில் பாஜக - அதிமுக வெற்றிக் கூட்டணியாக செயல்படும்” என்று அவர் கூறினார்.  

அவரைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி. சாலை பணி திட்டத்திற்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி. தடையில்லா மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பால் முதலீடுகள் குவிந்து வருகின்றன. ரூ.1125 கோடி மதிப்பில் திருப்பூரில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமரின் உழைப்பால் உலக அளவில் இந்தியா பெருமை அடைந்துள்ளது” என்று அவர் கூறினார். 

தொடர்ந்து தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பிரதமர் மோடிக்கு வேல் ஒன்றை பரிசாக அளித்தார். 

Next Story