"ஓட்டுக்கு பணம் பெற்றால் நாடு நாசமாகி விடும்" - டிடிவி தினகரன் பேச்சு


ஓட்டுக்கு பணம் பெற்றால் நாடு நாசமாகி விடும் - டிடிவி தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 30 March 2021 9:58 AM GMT (Updated: 30 March 2021 9:58 AM GMT)

ஓட்டுக்கு பணம் பெற்றால் நாடு நாசமாகி விடும் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

மதுரை,

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் டேவிட்அண்ணாதுரையை ஆதரித்து பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது-

ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிறார்கள். 1,500 மற்றும் 2,000 ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டால் நாடு நாசமாகி விடும். ஆடு, மாடு வாங்குவது போல் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க துடிக்கிறார்கள்.  வெளிப்படையான ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும் என்றால் அ.ம.மு.க.வை ஆதரியுங்கள். தமிழின துரோகிகளை இந்த ஆட்சியில் தொடரவிடக்கூடாது. 

தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும். தமிழகத்தில் மக்கள் விரும்பாத துரோக ஆட்சி நடக்கிறது. இந்த தீயசக்தி ஆட்சியை தூக்கி எறிய எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள். மக்கள் விரும்புகிற ஆட்சி, நேர்மையான ஆட்சி, ஊழலற்ற ஆட்சியை நாங்கள் தருவோம்.

தமிழ்நாட்டில் தாய்மார்களை மிகவும் மதிப்போம் அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் பழனிசாமியின் தாயாரை முன்னாள் மத்திய மந்திரி ஆர்.ராசா தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது. எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்-அமைச்சர் ஆக்கியவர் சசிகலா தான். ஆனால் அவர் ஜெயிலுக்கு சென்ற பிறகு பதவி கொடுத்தவருக்கே செய்த துரோகம் மன்னிக்க முடியாத ஒன்றாகும். எதையும் நேரடியாக சந்தித்து மக்களாகிய உங்கள் தீர்ப்பை மதித்து நடப்பவன் நான். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story