காவல்காரனைப் போல மக்களை காக்கிறேன் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
ஊரைக்காக்கும் காவல்காரனை போல மக்களை காக்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
விராலிமலை,
அரசு வேலைகளில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சித்தன்ன வாசல் உள்ளிட்ட பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது பொதுமக்களிடையே அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-
கொரோனா என்ற பெரிய நோய் உலகத்தையே தாக்கிய போது சிறு சிறு கடைகள் முதல் விமானங்கள் வரை இயங்காத நிலையிலும் தான் ஊர் ஊராக சென்று கொரோனாவை கட்டுப்படுத்தினேன்.
பொது மக்கள் தனக்காக போட்ட ஒற்றை ஓட்டு தான் இத்தனை உயிர்களையும் காப்பாற்றியது. மேலும் மக்கள் போடக்கூடிய அந்த ஒவ்வொரு ஓட்டுதான் 7 மாவட்ட விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் காவிரி நீரை இங்கு கொண்டு வரவும் போகிறது.
காவல்காரனைப் போல மக்களை காக்கிறேன். ஊரைக்காக்கும் காவல்காரனை போல ஊருக்கு வெளியே நின்று காவல்காத்து தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story