தொகுதி கண்ணோட்டம்: வில்லிவாக்கம்


தொகுதி கண்ணோட்டம்: வில்லிவாக்கம்
x
தினத்தந்தி 31 March 2021 1:54 AM IST (Updated: 31 March 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய சட்டமன்ற தொகுதி என்ற சிறப்பை வில்லிவாக்கம் தொகுதி பெற்றிருந்தது.

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய சட்டமன்ற தொகுதி என்ற சிறப்பை வில்லிவாக்கம் தொகுதி பெற்றிருந்தது. 9 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தொகுதியில் இருந்தனர். 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, அந்த தொகுதியில் இருந்து அம்பத்தூர் தொகுதி புதிதாக உதயமானது. மேலும், கொளத்தூர், ஆவடி, மாதவரம், விருகம்பாக்கம், மதுரவாயல், அண்ணாநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சில பகுதிகள் சென்றன. நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியின் சில பகுதிகள் வில்லிவாக்கம் தொகுதியில் சேர்ந்தது. இதனால், சராசரியான தொகுதிகள் பட்டியலில் வில்லிவாக்கம் இணைந்தது. இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் கபூர்தாலாவில் உள்ள மிகப்பெரிய ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு அடுத்த படியாக 2-வது இடத்தில் உள்ள ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலை இங்குதான் உள்ளது. மேலும், இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, மனநல ஆஸ்பத்திரி, தனியார் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சிட்கோ நகர், மிகப்பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் இந்தத் தொகுதியில் இருக்கிறது.

வில்லிவாக்கம் தொகுதியில் இதுவரை நடந்த 10 சட்டமன்ற தேர்தல்களில், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 முறையும், காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 1977-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.சுப்புவும், 1980-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரும் வெற்றி பெற்றனர். 1984 மற்றும் 1989-ம் ஆண்டு தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் முறையே வி.பி.சித்தன், டபிள்யூ.ஆர்.வரதராஜன் ஆகியோர் வெற்றி வாகை சூடினர். 1991-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் காளனும், 1996-ம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. வேட்பாளர் ஜே.எம்.ஆரூணும் வெற்றி பெற்றனர். 2001-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டி.நெப்போலியனும், 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பி.ரங்கநாதனும், 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரும், 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பி.ரங்கநாதனும் வெற்றி பெற்றனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 2,40,352

பதிவான வாக்குகள் 1,50,116

ப.ரங்கநாதன் (தி.மு.க.) 65,972

தாடி ம.ராசு (அ.தி.மு.க.) 56,651

வில்லிவாக்கம் தொகுதியில், வன்னியர், நாயுடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். முதலியார், ஆதி ஆந்திர மக்கள், நாடார் சமுதாயத்தினரும் கணிசமாக உள்ளனர். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தத்தொகுதியில் உள்ள சிட்கோ நகரும் அடங்கும். சிட்கோ நகரில் மழைநீர் வடிகால் முறையாக பராமரிக்கப்படாததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, அங்குள்ள குறு, சிறு தொழில்கள் நசிந்து போயின என்று அப்பகுதி மக்கள் சோகத்தோடு சொல்கிறார்கள்.

போக்குவரத்து நெரிசல், குடிநீர் தட்டுப்பாடு, பட்டா பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்கதையாக இருக்கிறது. வில்லிவாக்கம் ரெயில்வே மேம்பாலப்பணிகள் நீண்ட காலமாக முடிக்கப்படாததால், அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

நியூ ஆவடி ரோட்டில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 10 ஆயிரம் குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்களும், பாரதி நகர், கிழக்கு ஏரிக்கரையில் வசிக்கும் மக்களும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேபோல், ஜி.கே.எம். காலனியில் உள்ள 2-வது ரெயில்வே கேட் பகுதியில், நீண்ட காலமாக போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இருப்பதால், அங்கே சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடந்த (2016-ம் ஆண்டு) சட்டமன்ற தேர்தலின்போது, வில்லிவாக்கம் தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 292 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, இறந்தவர்கள் பெயர் மற்றும் போலி வாக்காளர்கள் பெயர் நீக்கம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக 2,700 வாக்காளர்கள் மட்டுமே அதிகரித்து உள்ளனர்.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஜே.சி.டி.பிரபாகரும், தி.மு.க. தரப்பில் அ.வெற்றி அழகனும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர். இதில், தி.மு.க. வேட்பாளர் வெற்றி அழகன், மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனின் பேரன் ஆவார். ஏற்கனவே, இதே தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் 1980 மற்றும் 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக களம்கண்டு தோற்றுப்போனார். தற்போது, மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே, அ.தி.மு.க. - தி.மு.க. இடையே போட்டி பலமாக இருக்கும் என்றே தெரிகிறது.


Next Story