தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி இன்று மதுரை வருகை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) மதுரை வருகிறார். இரவில் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்.
மதுரை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக அவர் மதுரை வர இருக்கிறார்.
நாளை (2-ந் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டுகிறார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம்
இதற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த திடல் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மதுரை பிரசாரத்துக்காக மோடி கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று இரவு 8 மணிக்கு மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின்னர் பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
அங்கிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் காரில் புறப்பட்டு, பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து கலந்துகொள்கிறார்.
உச்சகட்ட பாதுகாப்பு
பிரதமரின் வருகையையொட்டி மதுரை நகரில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் நகரம் உள்ளது.
Related Tags :
Next Story