அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தேர்தல் பிரசார கையேடு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் வெளியிட்டார்


அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தேர்தல் பிரசார கையேடு காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 31 March 2021 11:09 PM GMT (Updated: 2021-04-01T04:39:09+05:30)

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி பிரிவு சார்பில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தேர்தல் பிரசார கையேடு வெளியிடப்பட்டது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி பிரிவு சார்பில் ‘அ.தி.மு.க. ஆட்சியில் வீணடிக்கப்பட்ட 10 ஆண்டுகள்' என்ற தலைப்பில் தேர்தல் பிரசார கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா தலைமை தாங்கினார். செயல் தலைவர் டாக்டர் விஷ்ணு பிரசாத், பொதுசெயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, ஆராய்ச்சித்துறை இணை செயலாளர் டாக்டர் ஹர்ஷவர்தன் ஷ்யாம் ஆகியோர் பங்கேற்றனர்.

10 கேள்விகள்

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான தேர்தல் பிரசார கையேட்டினை தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில் எல்லா நிலைகளிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. மோடி அரசாங்கத்திடம் அ.தி.மு.க. அரசு முழுமையாக சரண் அடைந்துள்ளதால், ஊழல் ஆட்சியாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் ஊழல் பெருகி இருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் மாற்றத்துக்காக ஏங்குகிறார்கள். அத்தகைய மாற்றத்தை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே நிகழ்த்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர், ‘முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் மீதான கடுமையான முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு ஏன் பதில் அளிக்கவில்லை? ஊழல் எதிர்ப்பு அமைப்பு தானாகவே முடங்கி போனது ஏன்? என்பது உள்பட 10 கேள்விகளை அ.தி.மு.க. அரசை நோக்கி எழுப்பினார்.

அதிகார துஷ்பிரயோகம்

அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான தேர்தல் பிரசார கையேட்டில், ‘பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடிகள், தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட அவமதிப்பு, ஊழல், உறவினர் ஆதரவு கொள்கை மற்றும் அச்சுறுத்தல், கல்வியில் தமிழக இளைஞர்கள் இழந்த வாய்ப்புகள், விவசாயிகள், மீனவர்கள் புறக்கணிப்பும்-அடக்குமுறையும், காலியான கஜானா, மோசமடைந்து வரும் பொது சுகாதாரம் மற்றும் கொரோனாவை கையாள தவறான மேலாண்மை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அதிகார துஷ்பிரயோகம், காங்கிரஸ் அரசும், பா.ஜ.க. அரசும்; தமிழ்நாட்டுக்கு யார், என்ன செய்தார்கள்?’’ போன்ற தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் இடம் பெற்றுள்ளன.

Next Story