அம்பத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிப்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை


அம்பத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிப்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
x
தினத்தந்தி 31 March 2021 11:16 PM GMT (Updated: 31 March 2021 11:16 PM GMT)

அம்பத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ஜோசப் சாமுவேல் என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திரு.வி.க. நகர், 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் உச்சக்கட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட சென்னை புறநகரில் உள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தி.மு.க. சார்பில் ஜோசப் சாமுவேல் (வயது 58) என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ., அலெக்ஸாண்டர் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

இதற்கிடையே தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசார களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த ஜோசப் சாமுவேலுக்கு நேற்று முன்தினம் திடீர் உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனை ஒன்றில் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இதையடுத்து, நேற்று காலை வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

8 பேருக்கு கொரோனா

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தி.மு.க.வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 3-வது தி.மு.க. வேட்பாளர் ஜோசப் சாமுவேல் ஆவார்.

தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை சேர்ந்த 8 வேட்பாளர்கள் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story