சர்ச்சைப் பேச்சு: ஆ.ராசா விளக்கம் திருப்தி இல்லை ,48 மணிநேரம் பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையம் நடவடிக்கை
சட்டப்பேரவை தேர்தலில் 48 மணிநேரம் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சென்னை,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆ.ராசா தன் பேச்சு குறித்து விளக்கமளித்ததோடு முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆ.ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் கோரியிருந்தது.
பின்னர் இது தொடர்பாக ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்த விளக்க கடிதத்தில், “உவமானம் என்ற முறையிலேயே மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசினேன். முதலமைச்சர் கண்கலங்கியது அறிந்து மன்னிப்பும் கோரியுள்ளேன். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எதுவும் பேசவில்லை. எனது பேச்சின் முழு வீடியோவையும் பார்த்தால் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரித்து வெளியிடப்பட்டது தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் 48 மணி நேரம் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவின் பெயரையும் நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக்கூடாது என்றும், முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story