அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது கே.எஸ்.அழகிரி அறிக்கை
மரபுகளை புறக்கணித்து பிரதமர் மோடி பேச்சு: அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது கே.எஸ்.அழகிரி அறிக்கை.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தமிழக வளர்ச்சிக்கான பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விரிவாக பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் தமது தகுதிக்கு குறைவான பல்வேறு கருத்துகளை கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பிரதமர் மோடி, ஆ.ராசா பற்றி குறிப்பிட்டு பேசியதோடு நில்லாமல், தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி குறித்தும் பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தியாவின் பிரதமராக இருப்பவருக்கு சில சம்பிரதாய மரபுகள் உள்ளன. அதனை முற்றிலும் புறக்கணிக்கிற வகையில், அவரது தமிழக தேர்தல் சுற்றுப்பயண பேச்சு அமைந்தது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டதையே உறுதி செய்கிறது.
ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை கூறி, தி.மு.க., காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான இயக்கம் என்று உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எவர் கூறினாலும், அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தேர்தல் பிரசாரத்தை திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற அவர்களின் கனவு நிச்சயம் நிறைவேறாது. தமிழக வாக்காளர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அமோக வெற்றி வழங்குவது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story