மிரட்டலுக்கு பயந்து பணிந்து செல்ல நாங்கள் அதிமுக அல்ல - ஸ்டாலின் டுவிட்


மிரட்டலுக்கு பயந்து பணிந்து செல்ல நாங்கள் அதிமுக அல்ல - ஸ்டாலின் டுவிட்
x
தினத்தந்தி 2 April 2021 7:53 AM GMT (Updated: 2 April 2021 7:53 AM GMT)

மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசனின் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், அண்ணா நகரில் உள்ள திமுக எம்.எல்.ஏ. மோகன் மகன் கார்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது. மிரட்டலுக்கு பயந்து அடிமையாய் காலில் விழ நாங்கள் அதிமுக அல்ல! அச்சமில்லை! துணிந்து எதிர்ப்போம்! உங்கள் தப்புக்கணக்குக்கான தெளிவான பதிலை மக்களே ஏப்.6-இல் வழங்குவர்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story