சோதனையை தொடர்ந்து நடத்துங்கள், அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும்" - பிரதமர் மோடி மீது ஸ்டாலின் விமர்சனம்
சோதனையை தொடர்ந்து நடத்துங்கள், அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், அரசியல் கட்சியினர் மக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தினர் பறக்கும்படைகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல வருமான வரித்துறையினரும் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்டையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், அண்ணாநகர் திமுக எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக்கின் வீடு மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், அறவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு சொந்தமான பகுதியிலும் வருமானவரி சோதனை நடைபெற்றது. தி.மலை திமுக எம்.பி., அண்ணாதுரைக்கு சொந்தமான பகுதியிலும் வருமானவரி சோதனை நடைபெற்றது.
திமுக கட்சி சார்ந்தவர்களை குறிவைத்து இன்று அடுத்தடுத்து நடத்தப்பட்டு வரும் வருமானவரி சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திமுக கட்சியினர் மீதான வருமானவரி சோதனை குறித்து தேர்தல் பிரசாரம் ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், சோதனையை தொடர்ந்து நடத்துங்கள், அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும் என்றும் சோதனையில் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.
Related Tags :
Next Story